கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

0
171

கெட் அவுட் ரவி! ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பரபரப்பு!

ஆளும் கட்சிக்கு எதிராக விரோத கருத்துக்களை பேசி வருவதால் ஆளுநர் ஆர்.என்.ரவி மீதான எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

நாள்தோறும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் ஆளுநருக்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.  இவரின் சமீப கால பேச்சுக்கள் இருக்கிற பிரச்சினைகளிலும் சர்ச்சைகளிலும் மேலும் எண்ணெய் ஊற்றும் விதமாகவே இவர் பேசி வருகிறார். மதம், இனம், மொழி, பண்பாடு ஆகிய விஷயங்களில் ஒரு தனி புத்தகமே போடும் அளவிற்கு சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகிறார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இல்லை என்ற கருத்தை வலிமையாக முன் வைக்கிறார். இவரின் இந்த பேச்சுக்கள் பல்வேறு கட்சியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இந்த ஆண்டிற்கான முதலாவது சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலில் ஆளுநர் உரையாற்றிய ரவி திராவிட மாடல், பெரியார், அண்ணா,மதநல்லிணக்கம், சமூகநீதி, மாநில மொழிகள் ஆட்சி மொழியாகப்பட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை தவிர்த்து உரையாற்றினார்.  மேலும் எழுதப்பட்ட வார்த்தைகளை தவிர்த்து பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

அடுத்து ஆளுநர் பேசிய வார்த்தைகளுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை முதல்வர் அறிவித்திருக்கும் பொழுது சபை நாகரிகம் இல்லாமல் அவையை விட்டு பாதியிலேயே ஆளுநர் சட்டசபையை விட்டு வெளியேறினார்.  இதற்கு பல்வேறு கட்சிகள் ஆளுநரின் இந்த சபை நாகரிகமின்மையை கண்டித்து பேசியுள்ளன.  இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாத பொருளாக மாறி உள்ளது. ஆளுநரின் இந்த செயல் சபை வரம்பு மீறிய செயல் என்று பல கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன. சில கட்சிகள் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தையும் அறிவித்துள்ளன.

ஆளுநரின் இந்த மெத்தன போக்கை கண்டித்து திமுக நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் அடித்து ஒட்டி உள்ளனர். குறிப்பாக சென்னை அண்ணா சாலை,ஜெமினி மேம்பாலம், அண்ணா அறிவாலயம்,  உள்ளிட்ட பல இடங்களில் அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ட்விட்டர் ட்ரெண்டிங் நம்பர் 1! கெட் அவுட் ரவி!  என்னும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. பதிவிட்ட அனைவருக்கும் நன்றி என்றும் கூறப்பட்டுள்ளது. போஸ்டரில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி, ஆகியோரின் புகைப்படங்களோடு திமுக நிர்வாகி சிற்றரசு வழக்கறிஞர் ஹேமந்த் ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. ஆளுநரை கண்டித்து முக்கிய சாலைகளில் திமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.