தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு!!

0
31
தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை… அபாய அளவை தாண்டி பாயும் கோதாவரி ஆறு…
தெலுங்கானா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கோதாவரி ஆறு அபாய அளவை தாண்டி பாய்ந்து கொண்டிருக்கின்றது. இதனால் கரையோற பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவரம் அடைந்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வாராங்கல், பூபாலப்பள்ளி, முளுகு ஆகிய பகுதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழையால் அங்குள்ள விளைநிலங்கள், வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றது.
தண்ணீரின் அளவு பல அடி உயரத்துக்கு அதிகரித்துள்ளதால் தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். உயரமான இடங்களில் பாதுகாப்பாக தஞ்சம் அடைந்தவர்களுக்கு ஹெலிக் காப்டர்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது. மழை காரணமாக ஆறுகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் நிரம்பியதால் சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோதாவரி ஆறின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்ச உயரத்தையும் தாண்டி அபாயக்கட்டத்தை தாண்டி கோதாவரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகின்றது. கோவில் நகரமான பத்ராச்சலம் பகுதியில் ஆற்றின் நீர்மட்டம் 49 மீட்டர் உயரத்தை தாண்டியுள்ளது.
இதையடுத்து கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் வாழும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கும் முகாம்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து மேலும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தெலுங்கானா மாநில அரசு முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. ஆந்திரா மாநிலத்திலும் கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.