கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து! 

0
94

கடைசி டி20 அதிரடி காட்டி ஆதிக்கம் செலுத்திய இந்தியா! வெளியேறிய நியூஸிலாந்து! 

குஜராத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்தை வென்றது இந்திய அணி.

நியூசிலாந்து அணி இந்தியாவில் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்நிலையில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இறுதி மற்றும் கடைசி டி20 போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் சாஹலுக்கு பதில் உம்ரான் மாலிக்கும் நியூசிலாந்து அணியில் டாஃபி நீக்கப்பட்டு லிஸ்டரும் சேர்க்கப்பட்டனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன், சுப்மன் கில் களம் இறங்கினர். இஷான் 1 ரன்னில் ஏமாற்றவே அடுத்து கில்லுடன் ராகுல் திருப்பாதி கைகோர்த்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 44 ரன்களில் (22பந்து,  4 பவுண்டரி, 3 சிக்சர்) பெர்குசன் கேட்ச்சில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த சூரியகுமார் 24 ரன்கள் (13பந்து, 1 பவுண்டரி,2 சிக்சர்) வெளியேறினார். அடுத்து கில்லுடன்  ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் இருவரும் அதிரடியாக விளையாடி நான்காவது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர். கில் சர்வதேச டி20 போட்டியில் 54 பந்தில் சதம் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஹர்திக் 30 ரன்களில் (17 பந்து, 4பவுண்டரி, 1 சிக்ஸர்) அடித்து டேரில் பந்து வீச்சில் கேட்ச் ஆனார்.

இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 234 என்ற இமாலய ரன்னை குவித்தது. கில் 126 ரன்  (63 பந்து 12 பவுண்டரி 7சிக்ஸர்), ஹூடா 2 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் பிரேஸ்வெல், பிளேர் டிக்னர், ஈஷ் சோதி, டேரல் மிட்செல் ஆகியோர் தலா 1 விக்கெட்  வீழ்த்தினார்.

அடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், டெவன் கான்வே  ஆட்டத்தை தொடங்கினர். ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அதிரடி பந்துவீச்சை துவக்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சீட்டுக்கட்டு போல் வெளியேறினர்.  இறுதியில் அந்த அணி 12.1 ஓவரில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து 168 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை தழுவியது.

அந்த அணியில் டெரல்மிட்செல் மட்டும் 35 ரன்கள் எடுக்க மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் பெவிலியன் திரும்பினர். இந்திய அணி பந்து வீச்சில் கலக்கி ஹர்திக் 4, அர்ஷ்தீப் -2, மாவி, மாலிக், தலா-2 விக்கட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றியை ருசித்து வரலாற்றை மீண்டும் நிலை நாட்டியது.