குமாரசாமி மகன் திருமணத்தில் விதிமுறை மீறலால் அரசு நடவடிக்கை : அமைச்சர் அதிரடி தகவல்..!!

0
61

நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக்கும் வகையில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமணம் பண்ணை வீட்டில் இன்று ஆடம்பரமாக நடைபெற்றது சர்ச்சையாகி உள்ளது.

தேவகவுடாவின் பேரனும் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகனுமாகிய நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணப்பாவின் பேத்திக்கும் இன்று பெங்களூரு பண்ணை வீடு ஒன்றில் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.

பெங்களூரு அடுத்த ராமநகராவில் பண்ணை வீடு ஒன்றில் நேற்று இரவு முதலே திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டார் கூட்டமும் அலைமோதியது. இந்த திருமணத்தை பற்றிய தகவல்கள் தெரிய கூடாது என்பதற்காகவே ராமநகராவுக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

ராமநகரா பண்ணை வீட்டுக்கு நேற்று சுமார் 40 கார்கள் சென்றன. லாக்டவுன் காலத்தில் இத்தனை கார்களை எப்படி அனுமதித்து போலீஸ் என்ற கேள்விக்கு, தங்களிடம் பதிவு செய்துவிட்டுதான் கார்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதுதான் போலீஸ் தந்த பதில்.

ஊரடங்கு காலம் என்பதால் எந்த ஒரு பொது ஒன்றுகூடலுக்கும் அனுமதி கிடையாது. திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் மிக குறைவான நபர்கள்தான் அனுமதிக்கப்பட்டும் தனிநபர் இடைவெளியையும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ஊரடங்கு உத்தரவை கேலிக்கூத்தாக்குகிற வகையில்தான் கவுடா குடும்பத்து திருமணம் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இது தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த குமாரசாமி, அரசிடம் உரிய அனுமதி பெற்றே திருமணம் நடத்தப்படுகிறது என கூறியிருந்தார். அதேபோல் எடியூரப்பா அரசும் கூட, குமாரசாமி வீட்டு திருமணம் முழுவதும் வீடியோ படம் எடுக்கப்படும். இதில் லாக்டவுன் விதிகள் மீறப்பட்டிருந்தால் சட்டப்படியான நடவடிக்கை பாயும் என எச்சரித்திருந்தது.

ஆனால் இன்றைய திருமணம் தொடர்பான புகைப்படங்கள், ஊரடங்கு விதிகளைப் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல்தான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இதனால் தேவகவுடா வீட்டு திருமணம் பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இது பற்றி கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாரயண் “குமாரசாமி விதிமுறைகள் பின்பற்றப்படும் என்று கூறியிருந்தார். அவர் பல வருடங்களாக அரசியல் தலைவராக இருந்து வருகிறார். முதல்வர் பதவியையும் வகித்துள்ளார் . அவர் விதிமுறைகளை பின்பற்றவில்லை என தெரிந்தால், அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

author avatar
Parthipan K