பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

0
79

மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 70 வருட காலமாக பல்வேறு மொழிகளில் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி நோய்த்தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மும்பையில் இருக்கின்ற பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர கண்கணிப்பிலிருந்து வந்த லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். ஆகையால் திரையுலகை சேர்ந்தவர்களும், அவருடைய ரசிகர்களும், மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறார்கள்.

மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலம் மும்பை பிரபு காஞ்சியில் ஆரம்பமானது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று கொண்டு இசை குயிலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ராணுவ வாகனத்தில் வைத்து இறுதி சடங்கிற்காக சிவாஜி பார்க் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது அவருடைய பூதவுடல்.

இந்த சூழ்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பாரதரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அதோடு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங், கோவா மாநில முதல்வர், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். மங்கேஷ்கரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சச்சின், ஷாருக்கான், உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

மும்பை சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டிருந்த பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது, முப்படை வீரர்கள் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையினர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

லதா மங்கேஷ்கர் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. லதா மங்கேஷ்கரின் உடலில் போர்த்தப்பட்ட தேசியக்கொடி உரிய நடைமுறையுடன் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து மும்பை சிவாஜி பூங்காவில் முப்படை மாநில காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது .இதனை நேரிலும், தொலைக்காட்சியிலும், கண்ட ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். ஆனாலும் லதா மங்கேஷ்கர் தன்னுடைய குரல் மூலமாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.