விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு?

0
133

விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும்! இல்லையெனில் சாகும் வரை போராட்டம்! என்ன செய்யப் போகிறது மத்திய மாநில அரசு?

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார,13 கிராம பகுதிகளை உள்ளடக்கி பசுமை வெளி விமான நிலையத்தை அமைக்க மத்திய மாநில அரசு சார்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆனால் கடந்த 145 நாட்களாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதைத்தொடர்ந்து ஏகனாதபுரம் கிராமத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி,விமான நிலையம் கட்ட விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து,கிராம உரிமை மீட்பு பேரணி நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டக் குழுவினருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவைச் சேர்ந்த இளங்கோ தெரிவித்தார்.

அதன்படி 146 ஆவது நாளான இன்று டிசம்பர் 19 திட்டமிட்டபடி 13 கிராமங்களை சேர்ந்த மக்கள், வாயில் கருப்பு துணி கட்டி,கையில் கருப்பு கொடி ஏந்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல ஏகனாதபுரம் அம்பேத்கர் சிலை முன்பு குவிந்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள்,
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விவசாய நிலத்தை பாதுகாப்போம் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். மேலும் கோவை அன்னூர் விவசாயம் நிலங்களை கையாகப்படுத்த மாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.அதேபோன்று பேரன்தூர் விவசாய நிலங்களை கையகப்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கிராம மக்களின் இந்த பேரணியை தொடர்ந்து 1000 காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர், பேரணி தொடங்கிய 500 மீட்டர் தொலைவில் காவல் துறையினர் மக்களை தடுத்து நிறுத்தினர்.மேலும் பேரணியாக வந்த கிராம மக்களிடம் ஸ்ரீபெரும் புதூர்வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் தங்கம் தென்னரசு, எ.வ வேலு அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்களை சந்திக்க அனுமதி பெற்று தருவதாக உறுதியளித்த பின்பு மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

செய்தியாளர்களிடம் மீண்டும் பேசிய ஏகனாபுரம் மக்கள்,146 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ளோம்.எங்களின் ஒரே கோரிக்கை பரந்தூர் விமான நிலையத்தை கைவிட வேண்டும்.மாற்று இடம் கொடுத்தாலும் நாங்கள் செல்ல மாட்டோம்.சாகும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
Pavithra