துணை வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்!

0
77

பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் தள்ளி போட்டு கொண்டு வந்த தமிழக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதனை எதிர்த்து தமிழக எதிர்க் கட்சியான திமுக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தாலும் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள துணை வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 6 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில் அடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்காக நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்ப்பது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வாங்கப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் தகுதியுள்ளவைகள் ஏற்கப்பட்டு, புதிய பெயர்கள் சேர்க்கப்பட்ட பின் தயாரிக்கப்பட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலை தற்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.
 
தற்போது வெளியிட்டுள்ள துணை வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர் அதன் அடிப்படையில், 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 257 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண் வாக்காளர்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள் 5 ஆயிரத்து 924 பேர்களும் இந்த வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு மொத்தமாக தமிழகத்தில், 6 கோடியே ஆயிரத்து 329 வாக்காளர்கள் தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை உள்ள கால கட்டத்தில் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 571 பேர் இந்த பட்டியலில் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk