மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கட்டம் கட்டும் காவல்துறை!

0
85

கடந்த 15ஆம் தேதி நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் இதனையடுத்து அதற்கு அடுத்த நாளான 16ஆம் தேதி அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை வடபழனியில் இருக்கின்ற சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்த சூழ்நிலையில், கடந்த 17ஆம் தேதி சென்னை வடபழனியில் இருக்கின்ற சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் 4:00 மணி 35 நிமிடத்திற்கு மரணமடைந்தார்.

இந்த நிலையில், நடிகர் மன்சூர்அலிகான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மக்களை எதற்காக கட்டாயப்படுத்துகிறார்கள் அப்படி என்றால் அந்த தடுப்பூசியில் என்னதான் இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார் அதோடு ஆரோக்கியமாக இருந்த நடிகர் விவேக் ஏன் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டவுடன் இறந்து போனார் என்றும், கேள்வி எழுப்பியிருக்கிறார். அதோடு நான் தெருக்களில் தூங்குகிறேன் பிச்சைகாரர்களுடன் உணவை பகிர்ந்து கொள்கிறேன், எனக்கு எதற்காக இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை கவசங்களை கட்டாயமாக்க வேண்டாம் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ஆகவே அவருடைய இந்த பேட்டி சுகாதார பணிகளை கொச்சை படுத்தும் விதமாக இருக்கிறது, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதென கூறி அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து சென்னை கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதன்படி மன்சூர்அலிகான் மீது இந்திய தண்டனை சட்டம், தொற்றுநோய் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்து மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நேற்றைய தினம் விசாரணை நடைபெற்றது. பொதுமக்கள் இடையே தேவையற்ற பீதியையும் பதற்றத்தையும் அவருடைய பேட்டியின் மூலமாக ஏற்படுத்தியிருக்கிறார் என்று தெரிவித்து அதன் காரணமாக, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என காவல் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதி செல்வகுமார் மன்சூர் அலிகானின் மனுவில் அவர் மீது தாக்கல் செய்யப்பட்டிருக்கின்ற முதல் தகவல் அறிக்கை தொடர்பான தகவல் எதுவும் இல்லை ஆகவே புதிய முன்ஜாமின் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்து அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.