பணியில் இருந்த காவலரை கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உதவியாளர்! புகார் அளித்த போக்குவரத்துக் காவலர்!

0
79

தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைகள் பராமரிப்பு துறை அமைச்சராக இருந்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தண்டுபத்து கிராமத்தைச் சார்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் இவருடைய உதவியாளராக பணிபுரிந்து வருபவர் கிருபாகரன்.

இப்படியான நிலையில், சென்ற 18-ஆம் தேதி காலை 10 .30 மணி அளவில் திருச்செந்தூர் மணி ஐயர் உணவகத்தில் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்கு இடையூறாக கிருபாகரன் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான இனோவா கார் நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

அந்த சமயத்தில் அங்கே போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் முத்துக்குமார் என்பவர் அந்த காரை எடுத்து ஓரமாக நிறுத்துமாறு அந்த காரின் ஓட்டுநர் குமார் என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் கூச்சலிட்டு அதன் பின்னர் காரை தள்ளி நிறுத்தி இருக்கிறார்கள்.

சற்று நேரத்தில் ஹோட்டலின் உள்ளே இருந்து வெளியே வந்த அமைச்சருடைய உதவியாளர் கிருபாகரன் போக்குவரத்து காவலர் முத்துக்குமாரை ஆபாசமாக பேசியிருக்கிறார். அதோடு காவலர் முத்துக்குமாரை இருவர் பிடித்துக் கொள்ள அவருடைய கன்னத்தில் கிருபாகரன் ஓங்கி அறைந்து இருக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்ட காவலர் முத்துக்குமாரன் அதன்பிறகு இது தொடர்பாக திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.இந்த விவகாரம் காவல்துறையிடம் மற்றும் பொதுமக்களிடமும் காட்டுத்தீயாக பரவி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து காவல் அதிகாரி முத்துக்குமாரர் தெரிவித்ததாவது, நான் பணிவுடன் தெரிவித்து இருந்தேன் ஆனால் ஓட்டுநர் குமார் என்னை அவதூறாக பேசினார் அதோடு கிருபாகரன் பொதுமக்கள் மத்தியில் என்னை தாக்கி மிக கேவலமாக வசைபாடினார். அன்று இரவில் ஆய்வாளர் முன்னிலையில் இருவரும் என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். நான் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி அனைத்தும் முருகக்கடவுள் சந்நிதி பகுதியில் நடந்திருக்கிறது. இறைவன் தண்டனை கொடுப்பான் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் இதுதொடர்பாக தெரிவித்ததாவது காவல்துறை அதிகாரி முத்துக்குமாரன் தாறுமாறாக பேசியதுடன் ஓட்டுநரிடம் அடாவடியாக நடந்திருக்கிறார். அதைத்தான் நான் தட்டிக் கேட்டேன் அப்போது காரசார விவாதம் நடந்தது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முத்துக்குமாரன் இதை ஊதிப் பெரிதாக்கி தன்னை அடித்ததாக காவல்துறையில் புகார் வழங்கிவிட்டார் என தெரிவித்து இருக்கிறார்.

மீண்டும் பிரச்சனை செய்ய வேண்டாம் என்று எண்ணியதால் இரண்டு தரப்பினரும் சமாதானம் ஆகிவிட்டோம் புகாரும் திரும்பப் பெறப்பட்டு விட்டது இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது, நான் சென்னையில் உள்ளேன் இவ்வாறான சம்பவம் நடந்ததும் எனக்கு தகவல் கிடைத்ததும் திமுகவினர் எப்போதும் காவல்துறையினருடன் இணக்கமாக செயல்படுபவர்கள். ஆகவே காவல்துறையிடம் மல்லுக்கட்ட கூடாது பொய் புகார் என்றாலும் கூட பரவாயில்லை காவல்துறை அதிகாரியிடம் சுமுகமாக செல்லுங்கள் என தெரிவித்து விட்டேன். அதன் அடிப்படையில்தான் காவல்துறை அதிகாரிகளிடம் பேசி சமாதானமாகி விட்டார்கள் .பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டு விட்டது என தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்ததாவது, இந்த பிரச்சனை என்னுடைய கவனத்திற்கு வந்தது விசாரணை நடத்தியதில் நடைபெற்ற சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை நான் பிறப்பித்தேன் ஆனால் புகார் வழங்கியவர் அதை திரும்ப பெற்றுவிட்டார். இரண்டு தரப்பினரும் சமாதானமாக போய்விட்டதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டார்கள். இதனால் முன்னெடுத்து வந்த எந்த நடவடிக்கையும் எடுக்க இயலவில்லை என தெரிவித்தார்.பணியில் இருந்த காவலரை அமைச்சருடைய உதவியாளர் தாக்கிய சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையினரின் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. இந்த பிரச்சனை தற்காலிகமாக முடித்து வைக்கப்பட்டு இருந்தாலும் திமுகவினர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இந்நிலையில் மேலும் வலு சேர்ப்பதாகவே இருக்கிறது என தெரிவிக்கிறார்கள் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள்.