இனி வன்முறையில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி – நஷ்ட ஈடாக 6.27 லட்சம் வழங்கிய கிராம மக்கள்.

0
64

உத்தர பிரதேசத்தில் நோட்டீஸ் வரும் முன்பே, வன்முறையில் பொது சொத்துகள் சேதம் அடைந்ததால் தங்களது தவறை உணர்ந்து ரூ.6.27 லட்சம் நஷ்டஈடு வழங்கிய கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும் இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவதாகவும்  மாவட்ட நீதிபதி கருத்து.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய கிராம மக்கள், அதற்கான நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை உத்தரப் பிரதேச அரசிடம் வழங்கினர். உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த 20ம் தேதி பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துகளை அடித்து நொறுக்கியும்,  தீ வைத்தும் சேதப்படுத்தினர். இதன் மூலம், ₹50 லட்சம் மதிப்புள்ள பொதுச் சொத்துகள் சேதமாகி இருப்பதாக உபி அரசு கணக்கிட்டுள்ளது. மேலும், போராட்டக்காரர்களிடம் இருந்து இந்த தொகையை வசூலிக்கும் அதிரடி நடவடிக்கையை அது  எடுத்துள்ளது.

அந்தந்த பகுதிகளில் ஏற்பட்ட சேதத்தின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 130 பேருக்கு இந்த தொகையை செலுத்தும்படி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்த  நடவடிக்கை, போராட்டக்காரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட புலசந்த்சார் மாவட்டத்தில் உள்ளது உப்ரீத்காட் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியான ஷகிலுல்லாவின் தலைமையிலான குழு, நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர்  சந்தோஷ் குமார் சிங்கை சந்தித்தது.

 அப்போது, தங்கள் பகுதியில் நடந்த சேதத்துக்கான நஷ்டஈடாக ரூ.6.27 லட்சத்தை அவரிடம் வழங்கினர். தாங்கள் செய்த தவறை உணர்ந்து, இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இத்தனைக்கும் இந்த மாவட்ட நிர்வாகம் இன்னும்  இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கவில்லை. நோட்டீஸ் வரும் முன்பாகவே, இவர்கள் நஷ்டஈடு தொகையை வழங்கியதற்காக பாராட்டுகள் குவிகின்றன. அதேபோல், இதே மாவட்டத்தை சேர்ந்த கோட்வாலி பகுதி மக்களும், ‘இனிமேல் வன்முறையில் ஈடுபட மாட்டோம்’ என்று மாவட்ட கலெக்டரை சந்தித்து உறுதிமொழி கடிதம் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து புலசந்த்சார் மாவட்ட நீதிபதி ரவீந்திர குமார்  கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வன்முறையில் அரசாங்கத்திற்கு சொந்தமான கோடி கணக்கான சொத்துக்கள் சேதமடைந்தன,மக்கள் அவர்களாகவே முன்வந்து சேதத்தை கணக்கிட்டு மக்களிடம் வசூலித்து நஷ்ட ஈட்டை வழங்கியுள்ளனர். நாட்டிற்கே இது ஒரு முன்னுதாரணம் என்றும் இனி இப்படி வன்முறைகள் நடைபெறாமல் இருக்கும் என்று நம்புவதாகவும்  நீதிபதி. ரவீந்திர குமார்  தெரிவித்தார்.

author avatar
Parthipan K