என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் – கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!

0
98
#image_title

என்எல்சி நிறுவனம் நிரந்திர வேலை மற்றும் ஏக்கருக்கு 40 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது முக்கிய பிரச்சினையாக என்எல்சி சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை உள்ளது.

உரிய இழப்பீடு மற்றும் நிரந்திர வேலை வழங்க கோரி நிலத்தை கொடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லட்ச ரூபாய் கொடுத்து என்எல்சி நிறுவனம் நிலத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. ஆனால் தற்பொழுது நிலத்தை கையகப்படுத்த வந்தபோது அப்பகுதி மக்கள் கூடுதல் இழப்பீடு கேட்டனர்.

இந்த இழப்பீடுக்கான பேச்சுவார்த்தையில் 6 லட்சம் ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய் வரை கூடுதல் இழப்பீடு வழங்க என்எல்சி நிறுவனம் ஒப்புதல் தெரிவித்தது.

ஆனால் ஆறு லட்சம் முதல் 25 லட்சம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அனைவருக்கும் ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இதற்கு என்எல்சி நிறுவனம் ஒப்புதல் அளிக்காத நிலையில் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துவதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று கத்தாழை ஊராட்சி சார்பில் கத்தாழை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் என்எல்சி நிறுவனம் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு நிரந்திர வேலை வழங்க வேண்டும்.

ஏக்கர் ஒன்றுக்கு 40 லட்சம் கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த மனுவை தீர்மானம் ஆக நிறைவேற்றி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து இது தீர்மானமாக கத்தாழை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

author avatar
Savitha