சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

0
33
#image_title

சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் விரும்ப மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

கடந்த இரு தினங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.அதில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,சனாதன தர்மம் குறித்து சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினார்.சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது,அதை ஒழிக்க வேண்டுமென்று பேசினார்.இவரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தற்பொழுது நாடு முழுவதும்
இருக்கின்ற இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு இந்து மத நம்பிக்கையை புண்படுத்துவதாகவும்,இவரின் பேச்சு வெறுக்கத்தக்கதாகவும் மாறிவிட்டது என்று கூறினார்.

மேலும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள் முதலில் திராவிடம் என்று கூறுவார்கள்,பிறகு சனாதனம் என்று கூறி மக்களை ஏமாற்றுவார்கள்.இவர்களின் இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சையாக பேசியிருக்கிறார்.இவரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சை எந்த மதத்தினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தற்பொழுது தமிழ்நாட்டில் பல்லடம் கொலை சம்பவம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.இவற்றின் மீது தமிழக மக்களின் கவனம் சென்று விட கூடாது என்பதற்காக சனாதனம் பற்றி பேசி உதயநிதி அவர்கள் மக்களின் மனதை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் திமுக ஏன் பயப்படுகிறது? எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வையுங்கள்,மீண்டும் எங்கள் ஆட்சிதான் வரும் என்று சொல்ல வேண்டியது தானே? அவர்களால் சொல்ல முடியாது.அதிமுகவை அழித்துவிடுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார்.கருணாநிதி,மு.க.ஸ்டாலினால் கூட இது முடியவில்லை.உதயநிதி ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு ஒரு கத்துக்குட்டி மாதிரி என்று கூறினார்.