இந்தியாவில் ஊடுருவிய ஒமிக்ரான் நோய்த்தொற்று மீண்டும் முழு ஊரடங்கா? இன்று ஆலோசனை!

0
46

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா திரும்பிய இருவருக்கு ஒமிக்ரான் நோய்த்தொற்று உறுதியாகியிருக்கிறது. 66 வயது ஆண் ஒருவருக்கும், 46 வயது ஆண் ஒருவருக்கும், இந்த நோய்த்தொற்று உறுதியானதாக தெரிவிக்கபடுகிறது. இந்த சூழ்நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 46 வயதான மருத்துவருடன் தொடர்பில் இருந்த ஐந்து நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.

ஆனாலும் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு யாருக்காவது எந்தவித தீவிர அறிகுறிகள் தென்படுகிறதா என்று பரிசோதனை செய்ததில் அப்படி எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை. எல்லோரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. அதோடு மேலும் ஐந்து பேரிடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும், 250க்கும் அதிகமானோர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர்கள் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில் ஒமிக்ரான் நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டது அறிந்துகொண்ட பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும், விழிப்புணர்வுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையிலும் நோய்தொற்று பாதிப்பு விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும், நிபுணர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் பிறகு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி வருவதாக தெரிவித்து இருக்கும் பசவராஜ் பொம்மை, நோய்த்தொற்று உறுதியானவர்கள் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து கண்டுபிடிப்பதே தங்களுடைய கடமை என்று மாநிலத்தில் ஏற்கனவே சர்வதேச விமான பயணிகளை கண்காணித்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.