லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய ஊராட்சி செயலர்கள்!!

0
215

பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் சிக்கிய 5 ஊராட்சி செயலர்களை அதிரடியாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்தனர்.

தாம்பரம்: சிட்லபாக்கம் முதல் பிரதான சாலையில் பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் 15 ஊராட்சிகள் உள்ளன. இந்த அலுவலகத்தின் மூலம் கட்டிட அனுமதி, சாலை பணிகள், ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான பணிகள், அங்கன்வாடி மையங்கள், சமூக நலத்துறையின் நல உதவிகள், திருமண உதவித்தொகை திட்டம், இரண்டு பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி சென்னை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுருபரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் திடீரென இங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.22.55 லட்சம் ரொக்கமும் 12 சவரன் நகைகளையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள் உட்பட 11 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரூ.10.66 லட்சம் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையை அடுத்து, பரங்கிமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் கடலூர் மாவட்டத்திற்கும், ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் வேலூர் மாவட்டத்திற்கும், பெரும்பாக்கம் ஊராட்சி செயலர் ஜெயராமன் ராணிப்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஓய்வு பெறுவதாக இருந்த ஊராட்சி செயலர் ஜெயராமன் அதற்கு முன்னதாகவே திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 12 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ஆகியவை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த லஞ்ச புகாரில் தொடர்புடைய மேடவாக்கம் ஊராட்சி செயலர் பாபு, ஒட்டியம்பாக்கம் ஊராட்சி செயலர் ஜான்சன், பெரும்பாக்கம் ஊராட்சி செயலர் சேதுபதி, நன்மங்கலம் ஊராட்சி செயலர் வேலுசாமி ஆகியோரை தற்போது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்தனர்.

இதேபோல் காட்டாங்கொளத்தூர், குன்றத்தூர், திருப்போரூர் ஒன்றியங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K