பங்குனி மாதத்தின் சிறப்பும்! சிறப்பு வாய்ந்த விரதங்களும்!

0
220

தமிழ் மாதங்கள் 12 12 மாதங்களிலும் பங்குனி மாத சிறப்புகள், விழாக்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை அதிகமாக உள்ளடக்கியது. பங்குனி உத்திரம், வசந்த நவராத்திரி, விழாக்களும், காரடையான் நோன்பு, விஜயா ஏகாதசி, ஆமலகீ ஏகாதசி, உள்ளிட்ட வழிபாட்டு முறைகளும், காரைக்கால் அம்மையார் குரு பூஜையும், இந்த மாதத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த மாதத்தில் தெய்வங்களின் திருமங்களுடன் மனிதர்களின் திருமணமும் நடைபெறுவதால் இது திருமண மாதம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. இந்த மாதத்தில்தான் தாவரங்களில் உதிர்ந்த இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும். ஆகவே இந்த மாதம் வசந்த காலத்தின் ஆரம்பமாக இருக்கிறது. இனி பங்குனி மாத சிறப்புகள் தொடர்பாக ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியை முன்னிட்டு வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளிலே சிவன், பார்வதி, முருகன், தெய்வயானை, ராமர், சீதை, ஆண்டாள், ரங்கமன்னார், உள்ளிட்ட தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஐயப்பன், லட்சுமி, அர்ஜுனன், உள்ளிட்டவர்களின் அவதாரமாகவும் இந்த பங்குனி உத்திர நாள் கருதப்படுகிறது. பெரும்பாலான நபர்கள் தங்களுடைய குல தெய்வ வழிபாட்டினை இந்த நாளில் மேற்கொள்கிறார்கள். தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்ற நாள் என்பதால் இந்த நாளில் கடைபிடிக்கப்படும் விரதம் கல்யாண விரதம் என்றழைக்கப்படுகிறது.

நல்ல திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என திருமணம் நடைபெற்ற அனைவரும் திருமண வாழ்க்கை வளமாக ஆரம்பிக்கவேண்டும் என்று திருமணமானவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனியில் பங்குனி உத்திர தினத்தன்று நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது என சொல்லப்படுகிறது.

பராசக்தி தாயை அன்று விரதமிருந்து வழிபாடு செய்யக்கூடிய நாட்களே நவராத்திரி என்றழைக்கப்படுகிறது. சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி, சியாமளா நவராத்திரி, வசந்த நவராத்திரி என்று ஆண்டில் 4 நவராத்திரி விழாக்கள் அன்னையை வழிபடுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நவராத்திரிகளில் சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி, உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன.

வசந்த நவராத்திரி பங்குனி மாத அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை 9 நாட்களாகவும், பங்குனி வளர்பிறை பிரதமை முதல் அடுத்த பௌர்ணமி வரையில் பங்குனி வளர்பிறை பிரதமை முதல் சித்ரா பௌர்ணமி வரையில் 45 நாட்களாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகை வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், சில கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டினை மேற்கொள்வதற்கு யோகத்தை அன்னை நமக்கு தருவாள் என்று கருதப்படுகிறது.

மழைக் காலத்தில் விளைந்த நெல்லைக் கொண்டு அடை செய்து கௌரி எனப்படும் காமாட்சி அம்மனை சாவித்திரி வழிபட்டதன் காரணமாக, இந்த காரடையான் நோன்பு உண்டானது கணவனின் உயிரினை சாவித்திரி மீட்டதால் இந்த விரதம் சாவித்திரி விரதம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இந்த விரதம் மாசி மாத கடைசி நாளன்று தொடங்கப் பெற்று பங்குனி முதல் நாள் வரையில் நடைபெறுகிறது. இந்த வழிபாட்டில் இடம்பெறும் நோன்பு கயிறானது வழிபாடு முடிவடைந்தவுடன் பெண்களால் அணியப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விரத முறையினை திருமணமான பெண்கள் மேற்கொள்வதால் தங்களுடைய கணவனின் ஆயுள் நீடிப்பதுடன் அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வினை அம்மன் வழங்குவதாகவும் ஒரு ஐதீகமிருக்கிறது.

பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு ஆலமகீ ஏகாதசி என்று பெயர் இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருந்து திருமாலை வழிபட்டால் கோ தானம் செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த விரதத்தை மேற்கொண்டால் நினைத்த காரியங்களை திருமால் முடித்துக் கொடுப்பார் என்றும் நம்பிக்கை இருக்கிறது.

பங்குனி மாதத்தில் தேய்பிறை சமயத்தில் வரும் ஏகாதசிக்கு விஜயா ஏகாதசி என்று பொருள் விஜயா என்றால் வெற்றி என்பது பொருளாகும். தங்களுடைய முயற்சியில் வெற்றி பெறுவதற்கு விருப்பம் கொள்வோர் இந்த விரத முறையை பின்பற்ற நற்பலன்கள் வந்து சேரும்.

ராமச்சந்திர மூர்த்தி இந்த விரதத்தை மேற்கொண்டு ராவணனை வெற்றி கொண்டு சீதாதேவியை மீட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவபெருமானால் அம்மையே என்றழைக்கப்பட்ட புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையாரின் குருபூஜை பங்குனி சுவாதி நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

பங்குனி மாத சிறப்புகள் தொடர்பாக தெரிந்துகொண்டோம். பங்குனியில் அவதரித்ததால் தான் வில்வித்தை வீரனான அர்ஜுனன் பால் குணம் என்ற பெயரினை பெற்றான் என சொல்லப்படுகிறது. வசந்த காலமான பங்குனி அனைவருடைய வாழ்விலும் வசந்தத்தை வீசி செல்லட்டும்.