வாய்ச்சொல் வீரனாக பிரதமர்! காங்கிரஸ் விமர்சனம்!

0
98

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது முதல் சென்ற 7 வருட காலமாக பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின பேச்சு ஒரே மாதிரியாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்திருக்கிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை வழங்கினார்.

அந்த சமயத்தில் 100 லட்சம் கோடி ரூபாய் செலவில் பிரதமரின் கதி சக்தி என்ற புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும், இதன் மூலமாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அதோடு துள்ளிய தாக்குதல், வான்வழித் தாக்குதல், உள்ளிட்டவை நடத்தப்பட்டதால் புதிய இந்தியா உருவாகி இருக்கிறது என்றும், கடின முடிவுகளை மேற்கொள்வதற்கு இந்தியா எப்போதும் தயங்காது எனவும், அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை கடந்த ஏழு வருடங்களாக ஒரே மாதிரியாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவிக்கும்போது, சென்ற 7 வருட காலமாக ஒரே பேச்சை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் பிரதமர் சொன்னபடி சிறு விவசாயிகள் உட்பட பாதிக்கப்பட்ட யாருக்கும், எந்தவிதமான சலுகையும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

புது திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் அறிவித்து இருக்கின்றார். ஆனாலும் அவர் அறிவித்த திட்டங்கள் எப்போதும் செயல்படுத்தப் படுவதில்லை. நிறைய விஷயங்கள் உரையில் தெரிவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவற்றைக் கடைபிடிப்பது இல்லை என்று தெரிவித்திருக்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.செங்கோட்டையில் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும், மீண்டும் விமர்சனம் செய்வதன் மூலமாக எதுவும் நடக்காது. வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து விவசாயிகளுக்கு அழிவை கொடுத்து விட்டார் பிரதமர் என்று தெரிவித்திருக்கிறார்.

சிறு விவசாயிகளின் பிரச்சனைகளில் இதற்கு முந்தைய அரசுகளை பிரதமர் மோடி விமர்சனம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது எத்தனையோ நீர்ப்பாசனத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன .மன்மோகன்சிங் மற்றும் சோனியா காந்தி உள்ளிட்டோர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது இதையேதான் தெரிவித்தார். உட்கட்டமைப்பு துறையில் 100 லட்சம் கோடி முதலீடு செய்வதாக பிரதமர் அறிவித்தார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. குறைந்தபட்சம் ஒரு லட்சம் கோடி திட்டங்கள் என்பதையாவது மாற்றியிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.