சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர்

0
86
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

சமயம் பார்த்து பழி வாங்கிய பாமக! என்ன நடக்குமோ? குழப்பத்தில் பாஜகவினர்

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர்.இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சார்பில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் விஏடி.கலிவரதன் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை இக்கூட்டணியின் சார்பில் திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடந்தது. ஆனால் அதிமுகவின் முக்கிய அமைச்சரான சிவி.சண்முகம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தை பாமக புறக்கணித்ததால் கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கபப்ட்டுள்ள வி.ஏ.டி.கலிவரதன் இதற்கு முன்பு பாமகவில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்துள்ளார்.மேலும் கடந்த  2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முகையூர் தொகுதியில் திமுக கூட்டணியில் பங்கு பெற்றிருந்த பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு பாமக தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து விலகி திமுகவிலும்,அதன் பிறகு தற்போது பாஜகவிலும் இணைந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த இவர் மாவட்ட தலைவர் பதவியை வகித்து வருகிறார். தற்போது அதிமுக கூட்டணியில் பாஜகவின் வேட்பளராகவும் இந்த தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சக கூட்டணி கட்சியான பாமக தலைமையை மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றபோது அங்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து திருகோயிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்தபோதும் தங்களுடைய கட்சி தலைமை கூறினால் மட்டுமே உரிய ஒத்துழைப்பு அளிப்போம் என்று அவர்கள் திட்டவட்டமாக கூறி விட்டார்களாம். இதன் எதிரொலியாக தான் நேற்று நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ஒட்டு மொத்த பாமக நிர்வாகிகளும் கூட்டணி கட்சியின் கூட்டம் என்றும் பார்க்காமல் புறக்கணித்தனர் என்று கூறப்படுகிறது. பாமகவின் இந்த செயலால் அதிமுக மற்றும் பாஜகவினர் அதிர்ச்சியடைந்தனர்

இதனையடுத்து கூட்டத்திற்கு வந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும்,சட்டத்துறை அமைச்சருமான சிவி.சண்முகம், பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்ததை அறிந்து விரைவில் பாமக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்று கூறியுள்ளார். இது மட்டுமில்லாமல் திமுக வேட்பாளர் பொன்முடியை வீழ்த்த கூட்டணி கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் அவர் அப்போது  கேட்டுக்கொண்டார்.