முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலி? கல்வீச்சு தமிழகம் மற்றும் புதுவை பேருந்துகள் நிறுத்தம்!

0
76

இந்துக்களை அவமதிக்கும் விதமாக பேசியதாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசாவை கண்டிக்கும் விதமாக புதுவையில் இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பாக முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

புதுவையில் அண்ணா சாலை ,நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி போன்ற முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் மூடியுள்ளனர்.

பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.தமிழக மற்றும் புதுவை அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுவையில் பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் உள்ளிட்டவை இயங்கவில்லை. இதன் காரணமாக பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் புதுவை, விழுப்புரம் மார்க்கத்தில் 2 தமிழக அரசு பேருந்துகள் 1 தனியார் சொகுசு பேருந்து உள்ளிட்ட 4 பேருந்துகள் கல் வீசித்தாக்கப்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தமிழகம் மற்றும் புதுச்சேரி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதோடு முழு அடைப்பு போராட்டம் காரணமாக நகரத்தில் எல்லா வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளனர். சிறிய கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. காலாண்டு காரணமாக அரசு பள்ளிகள் மட்டும் இயங்கினர். கல்லூரிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டனர். இதன் காரணமாக புதுவை முழுவதும் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.