வேளச்சேரி விவகாரம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

0
89

தமிழ்நாட்டில் கடந்த 6ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த பின்னர் இயந்திரங்கள் எல்லாம் ஸ்ட்ராங் ரூம் என்ற ரூமில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் இருந்து இரண்டு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டது சர்ச்சையை உண்டாக்கியது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. முதலில் இது பயன்படுத்தப்படாத மற்றும் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று தகவல் கிடைத்தது. இந்த நிலையில்,வேளச்சேரியில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரங்கள் 50 நிமிடங்கள் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.

இதில் 15 வாக்குச்சீட்டு இருந்திருக்கிறது. இந்த தேர்தல் விதி மீறல் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையை அனுப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா என்பதை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கின்ற ஒரு அறிவிப்பில் வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு எதிர்வரும் 17ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும். அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் விரிவான விளம்பரங்கள் செய்யப்படும், மறுவாக்குப்பதிவு தொடர்பான தகவல் தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும், மறுவாக்குப்பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும், நடத்த தேவையான கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில் 23 பேர் போட்டியிட இருக்கிறார்கள் அதிமுக சார்பாக எம். கே.அசோக் காங்கிரஸ் சார்பாக ஜே எம். ஹெச். ஹஸன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக எம். சந்திரபோஸ், மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக சந்தோஷ் பாபு, நாம் தமிழர் கட்சியின் சார்பாக கீர்த்தனா உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.