பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்!

0
94

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு! தீவிரம் காட்டும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. மொத்தமாக 12,825 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இதில் 218 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 12,607 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 57,778 பேர் களத்தில் உள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் தங்களது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனால் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

அந்த வகையில் தேர்தல் ஆணையமும் தங்களது தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோருடன் மாநில தேர்தல் ஆணையர் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையானது சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.

வாக்குபதிவு எந்திரங்களை பாதுகாப்பான அறையில் வைத்து கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பது, வாக்குபதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை மேற்கொள்வது, பூத் சிலிப் வழங்கும் பணியை மேற்கொள்வது மற்றும் பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவது போன்ற முக்கியமான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தேர்தலுக்கான பிரச்சாரம் 17-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து வாக்குபதிவு மையங்களுக்கு, வாக்குபதிவு எந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மற்றும் வாக்குபதிவு மையங்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவதையும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K