7 வாரங்களில் 97 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீட்டை திரட்டிய ஜியோ!

0
68

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் எந்த ஓர் துறையில் கால் பதித்தாலும் அந்த துறையிக் கோலோச்சி வரும் நிறுவனங்கள் கலங்கிப் போகும். அதற்க்கு காரணம் எந்த ஓர் துறையில் ரிலையன்ஸ் கால் பதித்தாலும் அதில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அது அதிரடியாக கையாளும் யுக்தியே காரணம்

2007ம் ஆண்டு ரிலையன்ஸ் அகமதாபாத்தில் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடட் எனும் நிறுவனத்தை பதிவு செய்தது. 2010ல் இன்ஃபோடெல் ப்ராட்பேண்ட் சர்வீசஸ் எனும் நிறுவனத்தின் 95 சதவீத பங்குகளை 4800 கோடிக்கு வங்கியது.

இன்ஃபோடெல் ப்ராட்பேண்ட் சர்வீசஸ் பொதுவுடமை நிறுவனமாக இல்லாத போதும் அந்த சமயத்தில் இந்தியாவின் 22 வட்டங்களுக்கு 4ஜி அலைகற்றை பெற்ற ஒரே நிறுவனமாக இருந்ததாலேயே அந்த நிறுவனத்தில் ஜியோ முதலீடு செய்தது. அந்த வரை துணை நிறுவனமாக அந்நிறுவனத்தை நடத்தி வந்த ரிலையன்ஸ் 2013ல் அந்த நிறுவனத்தின் பெயரை ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் என மாற்றியது.

2015ம் ஆண்டு ஜூன் மாதம் அந்த ஆண்டின் இறுதியில் தங்கள் நிறுவனம் அலைபேசி சேவையை துவங்குவதாக அறிவித்தது. அங்கிருந்து தனது அதிரடி ஆட்டத்தை துவங்கிய ஜியோ, தங்கள் அலைபேசி சேவையில் அழைப்புக்கு கட்டணமில்லை எனவும், நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டாவும் இலவசம் எனவும் அறிவித்தது. அது வரை 1 மாதத்திற்க்கு 1 ஜிபி டேட்டாவுக்கு 250 ரூபாய் வரை கட்டணமாக வசூலித்து வந்த மற்ற அலைபேசி நிறுவங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

அதுவும் சுமார் 1 வருடம் வரை ஜியோ பிரைம் எனும் பெயரில் 100 ரூபாய் மட்டும் வசூலித்து வருடம் முழுவதும் இலவச சேவையை அளித்தது ஜியோ. இதனால் மற்ற அலைபேசி நிறுவனங்களிலிருந்து ஜியோவுக்கு தங்கள் ஜாகையை மாற்றினார்கள் சந்தாதாரர்கள்.

ஜியோவின் இந்த அதிரடியால் சேவையை துவங்கிய 4 வருடங்களில் 38.8 கோடி சந்தாதாரர்களுடன் அலைபேசி சேவை நிறுவனங்களில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பேஸ்புக் நிறுவனம் 9.99 சதவிகித பங்குகளை ரூபாய் 43,574 கோடிக்கு வாங்கியது. அதனை தொடர்ந்து சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா ஆகிய நிறுவனங்கள் ஜியோவின் பங்குகளை வாங்கின. கடந்த ஐந்தாம் தேதி சில்வர் லேக் நிறுவனம் மேலும் ஜியோவில் முதலீடு செய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அபுதாபி முதலீட்டு நிறுவனம் ஜியோவின் 1.16 சதவிகித பங்குகளை ரூபாய் 5683 கோடிக்கு வாங்கியுள்ளது.

இதனால் கடந்த 7 வாரங்களில் 7 பெரிய நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்துள்ளதன் மூலம் மிக குறுகிய காலத்தில் 97885.65 கோடி முதலீடாகப் பெற்றுள்ளது. இதன் மூலம் உலக அளவில் அதிக அளவிலான முதலீடு பெறும் நிறுவனமாக திகழ்வதுடன், கொரோனா காரணமாக உலகமே நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் பிரபல சர்வதேச நிறுவனங்கள் ஜியோவில் முதலீடு செய்வது உற்று நோக்கப்படுகிறது.

இது குறித்து ரிலையன்ஸ், இது இந்தியாவின் டிஜிட்டல் திறன் மற்றும் ஜியோவின் தொழில் யுக்தி கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K