சலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள்

0
94

சலூன்கள் திறக்க அனுமதி – அடேங்கப்பா நிபந்தனைகள்

தலைப்பைப் பார்த்தவுடன், ஆவலுடன் படிக்க வந்திருப்பீர்கள். ஆனால் இவை இங்கே இல்லை நெட்டிசன்களே.

நாடு முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக முடி திருத்தும் நிலையங்களும், அழகு நிலையங்களும் திறக்கப்படாததால், மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். நமது நாட்டின் பிரச்சினையாக மட்டும் இது இருக்கவில்லை. உலக அளவிலான பிரச்சினையாக இது உருவெடுத்துள்ளது. அழகுபடுத்திக் கொள்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த பிரச்சினை அதிகரித்த நிலையில், மக்களின் மன நிலையை உணர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின், டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகள் நிபந்தனைகளுடன் முடிதிருத்தக்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளன. ஊரடங்கைத் தளர்த்துவதற்கான முதற்கட்ட அறிவிப்பிலேயே, இதற்கான அனுமதியை ஜெர்மனி அளித்துள்ளது.

ஜெர்மனியில் முடிதிருத்தக கடைகளுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

  • முன்பதிவின் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்கள் முடிதிருத்தகங்களுக்கு வர வேண்டும்.
  • முடிதிருத்தகத்துக்குள் நுழையும் முன்பாக வாடிக்கையாளர்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • முடிதிருத்தகங்களில் வாடிக்கையாளர்கள் யாரும் காத்திருக்கக் கூடாது.
  • முடிதிருத்தும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வாடிக்கையாளருக்கும், முடிதிருத்துபவருக்கும் இடையே ஒன்றரை மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • வாடிக்கையாளரும், முடிதிருத்துபவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • இருவரும் நேருக்கு நேர் பேசக்கூடாது. முடி எந்த ஸ்டைலில் திருத்தப்பட வேண்டும் என்பது குறித்தும், எந்த கலர் ஹேர் டை அடிக்க வேண்டும் என்பது குறித்தும் பேச வேண்டியது இருந்தால், கண்ணாடி மூலமாக இருவரும் மிகக் குறைவாகப் பேசிக் கொள்ளலாம்.
  • ட்ரையர் மூலமாக முடியை உலர்த்தக் கூடாது.
  • வெளிக்காற்று நன்றாக வரக்கூடியதாகவும், இட வசதி நிறைந்ததாகவும் முடி திருத்தும் நிலையம் இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் கத்தரிக்கோல் உள்ளிட்ட உபகரணங்களும், வாடிக்கையாளர் அமரும் இருக்கையும் கிருமிநாசினி கொண்டு முழுமையாகச் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
  • வாடிக்கையாளர்களுக்காகப் பயன்படுத்தப்படும் துணிகள் அனைத்தும் ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் நன்றாகத் துவைக்கப்பட வேண்டும். அல்லது ஒரு பயன்பாட்டிற்குப் பிறகு தூக்கி எறியக் கூடியதாக அவை இருக்க வேண்டும்.
  • ஜெர்மனியின் நிபந்தனை இவ்வாறு இருக்க, வழக்கமான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு மட்டுமே சேவை அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை ஸ்பெயின் விதித்துள்ளது.
author avatar
Parthipan K