இறந்த பேரன் உயிருடன் வந்ததால்..! அதிர்ச்சியில் இறந்த பாட்டி!!

0
60

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராபாளையம் அருகே உள்ள ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.

சத்யராஜும் அதாவது நண்பர் இளையபெருமாளும் நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்வராயன் மலைக்கு சென்றுள்ளனர். பின்னர், வெள்ளி மலையிலிருந்து கச்சராபாளையத்திற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கொடுந்துறை பகுதி சாலை வளைவில் வரும்போது எதிரே வந்த வாகனம் எதிர்பாராத விதமாக திடீரென மோதியது. வாகனம் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சத்யராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சத்தியராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு, பலத்த காயமடைந்த இளையபெருமாளையும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த சக்தி என்பவர் (எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருபவர்) நேற்று முன்தினம் தனது நண்பர் சின்னையன் என்பவருடன் வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் சாலை விபத்தில் சத்தியராஜ் இறந்ததை இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற சக்தி தான் இறந்து போனார் என்ற தகவலை சக்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே யாரோ ஒருவர் தவறுதலாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் தங்கள் மகன் சக்திக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அவர் செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளது என தகவல் கூறியுள்ளது. இதனால் உயிரிழந்தது தங்கள் மகன்தான் என தீர விசாரிக்காமல் முடிவு செய்த சக்தியின் பெற்றோர் வீட்டின் முன்பு பந்தல் போட்டு உற்றார் உறவினர்களுக்கு எல்லாம் தகவல் தெரிவித்து மருத்துவமனையில் இருந்து சக்தியின் உடலை வாங்குவதற்கு தயாராக காத்திருந்தனர்.

இந்த நேரத்தில் சக்தியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சின்னையன், சக்தியின் பெற்றோருக்கு போன் செய்து சக்தி தன்னுடன் தான் இருக்கிறார். நாங்கள் வேலை முடிந்து ஊருக்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று தகவல் கூறியுள்ளார். சில மணி நேரத்தில் சக்தியும் சின்னையனும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர்களை நேரில் கண்ட சக்தியின் பாட்டி மீனாட்சி ஆனந்த (வயது 80) அதிர்ச்சியில் இறந்து போனார். உயிருடன் இருப்பவரை விபத்தில் இறந்ததாக யாரோ சிலர் தவறான தகவலை பரப்பியுள்ளனர். நான் சாகவில்லை இதோ உயிரோடு தான் இருக்கிறேன் என்று நேரில் வந்தவரை பார்த்த அதிர்ச்சியில் அவரது பாட்டி இறந்து போனதால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

author avatar
Parthipan K