தீப்பிடித்து எரிந்த வீட்டினுள் 3 மாத கர்ப்பிணி பெண்ணின் பிணம்! கொலையா தற்கொலையா காவல்துறையினர் தீவிர விசாரணை!

0
67

நாட்டில் எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டு அறிவியல், விஞ்ஞானம், என்று அனைத்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒரு சில விஷயங்கள் மட்டும் இன்னமும் எந்தவிதமான மாற்றமும் காணப்படாமல் அப்படியே இருந்து வருகிறது.

நாட்டில் பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைந்தால் நாடு உடனடியாக முன்னேறும் என்றுதான் பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மத்திய, மாநில, அரசுகள்.

ஆனால் கிராமப்புறங்களில் எவ்வளவுதான் வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை இதுவரையில் யாரும் தெரிந்து கொண்டதைப் போல தெரியவில்லை.

பெண் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், அவர்கள் சமூகத்தில் முன்னேற்றமடைய வேண்டும், என்பதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பல திட்டங்களையும் கொண்டு வந்திருக்கின்றன.

இதையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு பெண் பிள்ளைகள் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பது தான் மத்திய, மாநில, அரசுகளின் இலக்காக இருந்து வருகிறது.

ஆனால் கிராமப்புறங்களில் பதின் பருவ வயதை கடந்து விட்டால் போதும் உடனடியாக பெண்பிள்ளைகளுக்கு வரன் தேட தொடங்கிவிடுகிறார்கள். அப்படி வரன் தேடி 19 வயது அல்லது 20 வயதிற்குள் திருமணம் முடித்து 25 வயதிற்குள் குழந்தை பெற்று அவர்களுடைய ஒட்டுமொத்த வாழ்வும் முடிந்து விட்டதைப் போல ஒரு தோற்றம் சமூகத்தில் காணப்பட்டு வருகிறது.

அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நல்லாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகலட்சுமி 19 வயதாகும் இவருக்கும், நாருகாபுரத்தைச் சேர்ந்த 27 வயதான ஜான்பாண்டியன் என்பவருக்கும், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

முருக லட்சுமி தற்சமயம் ஜான் பாண்டியனுடன் தாராபுரத்தில் வசித்துவருகிறார். அதேசமயம் முருக லட்சுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இப்படியான நிலையில், முருக லட்சுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் வீட்டில் தீப்பிடிப்பதை பார்த்த அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் வழங்கியிருக்கிறார்கள்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாத்தூர் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்திருக்கிறார்கள். அப்போது வீட்டினுள்ளே முருக லட்சுமி தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார்.

அதன் பிறகு அவருடைய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்தார்கள். இந்த தகவலை அறிந்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இருக்கன்குடி காவல்துறையினர் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையிலிருந்த முருக லட்சுமியின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக முருகலட்சுமியின் தாயார் முருகேஸ்வரி கொடுத்த புகாரினடிப்படையில் இருக்கன்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.