அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

0
81

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் எதிர்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் திட்டமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்டமாகவும், இருக்கிறது இதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.

ஏழை, எளிய, மக்கள் பயன்பெறும் விதத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2013ஆம் வருடம் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டனர் என தெரிவித்து இருக்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 700 உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன, அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கு கலவை சாதங்கள் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், பருப்புடன் கூடிய இரண்டு சப்பாத்தி 3 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைத்தவிர பெரும் மழை, வெள்ளம், புயல் காலங்களிலும் நோய் தொற்று காரணமாக, முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டன.

இந்த சூழ்நிலையில் அம்மா உணவகம் என்ற திட்டம் நடைமுறையில் இருக்கின்ற சமயத்தில் அதே போன்று மற்றொரு திட்டத்தை அந்த பெயரிலேயே செயல் படுத்தாமல் புதிதாக அதற்கு கலைஞர் உணவகம் என்று பெயர் வைப்பது அரசியல் நோக்கம் உடையதாக காலப்போக்கில் அம்மா உணவகம் என்ற திட்டத்தையே கலைஞர் உணவகம் என்று மாற்றுவதற்கான ஒரு முயற்சியாக அமைச்சரின் இந்த பேச்சு அமைந்து இருக்கிறது .திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு சில மாதங்களே ஆகின்ற சூழ்நிலையில், புதிதாக திட்டங்களைத் தீட்டும் அதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகவே புதிதாக தீட்ட ப்படும் இது போன்ற திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் அதிமுகவிற்கு எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.

அதேநேரத்தில் நடைமுறையில் இருக்கின்ற ஒரு திட்டத்தை இரண்டு பெயர்களில் செயல்படுத்துவது இதுவரையில் நடைமுறையில் இல்லாத ஒரு வினோதமான திட்டம். இது ஏற்றுக் கொள்ளத்தக்கவை இல்லை ஏழை எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவகங்களை அமைப்பது என்பது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிந்தனையில் தோன்றிய ஒரு அற்புதமான திட்டம். ஆகவே இந்தத் திட்டம் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஆகவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு பொது மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அதனை நிறைவேற்றும் விதத்தில் புதிதாக எத்தனை உணவகங்கள் அமைக்கப்பட்டாலும் அவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுகவின் சார்பாக வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் அவர் கூறியிருக்கிறார்.