அரிப்பு நீங்க அதனால் ஏற்பட்ட புண்கள் குணமாக செய்ய வேண்டிய எளிய வைத்திய முறைகள்!

0
168

அரிப்பு நீங்க அதனால் ஏற்பட்ட புண்கள் குணமாக செய்ய வேண்டிய எளிய வைத்திய முறைகள்!

வெயிலினால் ஏற்படக்கூடிய அரிப்பு, எரிச்சல், அதனால் ஏற்படக்கூடிய புண்கள், இதற்கான ஒரு தீர்வை பார்ப்போம். வெயில் காலம் வந்தாலே அதிக எரிச்சல் சேர்ந்து வரும். உடல் வறட்சியாக இருப்பவர்களுக்கும், அதிக வியர்வை சுரப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கும், வெயில் காலம் வந்தால் இந்த அரிப்பு,எரிச்சல் இதெல்லாம் வரும்.

இவை வராமல் இருக்க செய்ய வேண்டியவை
1. அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். நமக்கு எப்போதெல்லாம் தாகம் எடுக்கிறதோ அப்போதெல்லாம் தண்ணீர் பருக வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையும்பொழுது தான் தாகம் ஏற்படும். எனவே அந்த சமயத்தில் தண்ணீர் அருந்துவது நல்லது.

2. காலை, மாலை என இருவேளையும் குளிப்பது நல்லது.
3. மேலும் வெயில் காலங்களில் அணியக்கூடிய ஆடைகள் காட்டன் அல்லது பனியன் துணியால் ஆனதாக இருக்க வேண்டும். இந்த வகை துணிகள் தான் நமது உடலில் சுரக்கும் வியர்வையை உறிஞ்சும். இல்லையெனில் வியர்வை தங்கி அந்த இடத்தில் கிருமிகள் உருவாகி அரிப்பு எரிச்சல் ஏற்படலாம்.

4. வெயில் காலங்களில் இறுக்கமான ஆடைகளை தவிர்த்தல் நல்லது. அதுவும் இரவு வேளைகளில் மிகவும் தளர்வான ஆடைகளை அணிவது நமது உடலுக்கு நல்லது.

நமக்கு கை கால்கள் மடக்கும் பகுதி, அக்குள் பகுதி, கழுத்து பகுதி, இந்த பகுதிகளில் வியர்வை அதிகமாக சுரப்பதினால் அங்கு அதிகமாக அரிப்பு ஏற்படும். இதன் காரணமாக நாம் சொரிவதால் அந்த இடத்தில் புண்கள் அல்லது தடிப்புகள் உருவாகலாம்.இதற்கு இரவு தூங்குவதற்கு முன்பு அரிப்பு உண்டான இடங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவிக் கொண்டு படுக்கலாம்.

அடுத்து விளக்கெண்ணெயில் மஞ்சள் சேர்த்து கலந்து தடவலாம். இதனால் காயங்கள் ஏற்பட்டால் கூட ஆறிவிடும். இவையெல்லாம் இரவு நேரங்களில் செய்ய வேண்டியது. பகல் நேரங்களில் அரிப்பு வந்தால் அந்த இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுத்தால் அரிப்பினால் உண்டாகும் எரிச்சல் மட்டுப்படும்.