சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!

0
41

 

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை…

 

பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் விழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல சொரிமுத்து அய்யனார்.கோவிலில் விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமம் இன்றி செல்வதற்கு போதிய பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் சொரி முத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற விசேஷ நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

 

குறிப்பாக ஆடி அமாவாசை திருவிழா 15 நாட்கள் கொண்டாப்படும். ஆடி அமாவாசைக்கு 7 நாட்களுக்கு முன்பும், ஆடி அமாவாசைக்கு பிறகு 7 நாட்களும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குடில்கள் அமைத்து அங்கேயே தங்கி சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் ஆடி அமாவாசையை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளதால் அவர்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

 

மலைப்பகுதியில் குடில்கள் அமைக்கவும், தனியார் வாகனங்களில் செல்லவும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களது உடமைகளோடு மலை மீதுள்ள கோவிலுக்கு சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு பேருந்துகளும் குறைந்த அளவே இயக்கப்படுவதாகவும், பேருந்தில் கனமான சாமான்கள் மற்றும் ஆடுகள், சேவல்களை கொண்டு செல்ல முடியாததால் பக்தர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

 

காரையார் சொரி முத்து அய்யனார் கோயிலில் பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எந்த வகையில் நியாயம்?. மேலும் பக்தர்களுக்கு பேருந்து வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல், சொரி முத்து அய்யனார் கோயிலுக்கு விஷேச நாட்களில் பக்தர்கள் சிரமமின்றி செல்ல போதிய பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மலைப்பகுதியில் கோவில் உள்ளதால் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை சிறப்பாக செய்ய காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.