ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!

0
88
sterlite
sterlite

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!

நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறது.

தங்களால் ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதனை நாட்டுக்கு இலவசமாகத் தர தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசே ஏற்று நடத்தலாம் என உச்சநீதிமன்றம் ஐடியா கூறியது.

இதற்கு ஆதரவு பெருகியதால், தமிழக அரசிடம் போதிய வல்லுநர்கள் இல்லை, அதனால், அரசே ஏற்று நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கூடுதலாக பிரமானப் பத்திரத்தை நேற்று முன்நாள் தாக்கல் செய்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு கூறியது.

இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலையில் 35MT ஆக்சிஜன் மட்டுமே திரவ நிலையில் உற்பத்தி செய்ய முடியும் என்றும், மற்ற 1015MT ஆக்சிஜன் வாயு நிலையில் உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

35MT மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படுத்தலாம். மீதம் வாயு நிலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 92%-93% மட்டுமே பியூரிட்டி கொண்டது. இது தொழிற்சாலை பயன்பாட்டுக்கு மட்டுமே உதவும். மருத்துவத்திற்கு 99.4% பியூரிட்டி தேவை. அதிலும், வாயு நிலையில் உள்ள மொத்த ஆக்சிஜனையும் திரவ நிலைக்கு மாற்றவும், சேமிக்கவும் போதுமான வசதி ஸ்டெர்லைட் ஆலையில் இல்லை. அப்படி திரவ நிலைக்கு மாற்றவும், அதனை சேமித்து வைக்கவும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றால், ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 9 மாதங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களால் 1050MT ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்று வழக்கு மூலம் விளம்பரம் தேடிய வேதாந்தா நிறுவனம், அதனை மருத்தவத்திற்கு பயன்படுத்த முடியாது என்பதையும், வாயு நிலையில் தான் தயாரிக்க முடியும் என்பதையும் மறைத்திருப்பது சமூக வளைதங்களில் பேசு பொருளாக உள்ளது.