ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு!

0
69

ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்! மாளிகை முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வெளியிட்ட அறிவிப்பு!

ஆளுநரை கண்டித்து வருகின்ற இருபதாம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதலாவது சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. முதலில் பேசிய ஆளுநர் தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையின் 65 ஆவது பத்தியை வாசிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அண்ணல் அம்பேத்கர்,பெரியார், ஆகியோரின் பெயர்களை தவிர்த்து விட்டதும் பெண்ணுரிமை, சமூக நீதி, சுயமரியாதை, சமத்துவம், உள்ளிட்ட பல்வேறு வார்த்தைகளை நீக்கி பேசி விட்டதாக பரபரப்பு நிகழ்வு ஏற்பட்டது.

மேலும் இதுப்பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே அவை மரியாதையே இல்லாமல் ஆளுநர் வெளியேறியதும், தேசிய கீதம் கூட பாடி முடிக்காமல் கிளம்பியதும் பல்வேறு எதிர்ப்புகளை அவருக்கு எதிராக ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் இந்த செய்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கவர்னர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துகளின்  தொகுப்பு இல்லை. அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த உரையில் சிலவற்றை தவிர்த்தும் சிலவற்றைத் திரித்தும் கூறி இருப்பது அரசியல் சட்டப் படியும் தார்மீக நெறி படியும் தவறான ஒன்றாகும். தமிழகத்துடன் மோதல் போக்கை மேற்கொண்டிருக்கும் ஆளுநர் தமிழகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.

சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட ஆளுநர் ரவியை கண்டிப்பதோடு அவர் தமிழகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.மேலும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநரின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.