மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

0
125
#image_title

மோகன் ஜி படத்தில் காட்டப்பட்ட விவகாரம்! உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

 

இயக்குனர் மோகன் ஜி அவர்களின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் தமிழகத்தில் மறைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை வெளி உலகிற்கு எடுத்து காட்டியது. அந்த விவகாரம் தற்போது உச்ச நீதி மன்றம் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி பட்டியலின மக்கள் முன்னேற அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் சமீப காலமாக பட்டியலினத்திலிருந்து வெளியேறி மத மாறிய நபர்களும் தாங்கள் மதம் மாறியதை அரசிடமிருந்து மறைத்து இட ஒதுக்கீடு சலுகையை அனுபவித்து வந்தனர். இது உண்மையிலேயே பின் தங்கிய மக்களின் உரிமையை பறிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

 

மத மாறிய பிறகும் இட ஒதுக்கீடு சலுகையை அனுபவிக்கும் இந்த கிரிப்டோ கிறிஸ்டியன் விவகாரத்தை தான் ருத்ர தாண்டவம் திரைப்படம் வெளி உலகிற்கு எடுத்து காட்டியது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும்பாலான வழக்குகள் தொடரப்பட்டு அதில் சம்பந்தபட்ட மத மாறிய நபர்கள் பெற்ற இட ஒதுக்கீடு சலுகை பறிக்கப்பட்டது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசப்படும் பிரச்சனையாக மாறியது.

 

இந்நிலையில் தான் இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதி மன்றம் ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரையின்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது

 

இந்த கிரிப்டோ கிறிஸ்டியன் விவகாரத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது. அந்த வகையில் இந்த வழக்கானது நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டியலின மக்கள் காலம் காலமாக தீண்டாமை கொடுமைக்கு உள்ளானவர்கள் என்றும் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மதம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதற்கு ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அப்படியே ஏற்க முடியாது என்றும், தற்போதைய சூழலில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பல்வேறு ஆணையங்களின் முடிவுகள் இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நிலையில் ஏன் அதனை செயல்படுத்தக் கூடாது எனவும் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினர்.

 

மேலும், மதமாற்றத்துக்குப் பிறகும் சமூக புறக்கணிப்புகள் தொடர வாய்ப்புள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அரசியல் சாசன அம்சங்களைப் பரிசீலிக்கும் போது கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

 

ருத்ர தாண்டவம் தமிழ் திரைப்படத்தில் வெளிக்கொண்டு வந்த இந்த விவகாரம் உச்ச நீதி மன்றம் வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.