மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது! 

0
183

மக்களை காவு வாங்கிய கொடூரம்! பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது!

துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

துருக்கி, சிரியாவில் கடந்த திங்கள்கிழமை காசியான்டெப் மாகாணத்தில் 7.8 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்தன. கடந்த 10 ஆண்டுகளில் இது மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்றைய காலை நிலவரப்படி மொத்தம் 15 ஆயிரத்து 383 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் 12,391 பேர், சிரியாவில் 2992 பேர் உயிரிழந்துள்ளனர். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏராளமான நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவிற்கு நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அங்கு நிலவி வரும் கடும் குளிரால் கட்டிட இடிப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் தோய்வு ஏற்படுகிறது. மீட்பு படையினரும் மக்களை காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர். துருக்கியில் நிலவும் கடுங்குளிராலும் நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களை கடந்து விட்டதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என கூறப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் துருக்கியில் நிலவும் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் குளிரால் உயிரிழப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துருக்கியின் பெரும்பாலான பகுதியில் மீட்பு பணிகள் சென்றடையவில்லை. தோண்ட தோண்ட பிணங்களாக வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியடைய செய்கின்றன.