சீர்மரபினரை தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக களமிறங்கிய மற்றொரு சமூகம்!

0
98

ஏற்கனவே ஆளும் கட்சியான அதிமுகவிற்கு எதிராக பல்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் போராடி வருகிறார்கள் இந்தநிலையில், முத்தரையர் சமூகத்தினர் அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கி இருக்கிறார்கள். 22 இடங்களில் தனித்து போட்டியிட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல அதிமுகவிற்கு தங்களுடைய ஆதரவு இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.அம்பலக்காரர், முத்துராசா, பாளையக்காரர், முத்தரையர் சமூகம் மூப்பர் என்று 29 பட்டை பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் இவர்கள் எல்லோரும் இனி ஒரே பெயரில் முத்தரையர் என்று அழைக்கப் படுவார்கள் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்த சமயத்தில் அரசாணை வெளியிட்டார்.

அவர் அந்த அரசாணை வெளியிட்டது முதல் முத்தரையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிமுகவை அனைத்து தேர்தலிலும் ஆதரித்து வந்தார்கள். ஆனாலும் ஜெயலலிதா வெளியிட்ட அரசாணை இன்றுவரையில் செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.ஆகவே அந்த அரசாணையை செயல்படுத்த வேண்டும் எனவும், முத்தரையர் சமுதாயத்தை எம்பிசி பட்டியலில் இணைக்க வேண்டும் எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அந்த சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, முத்தரையர் சமூகம் சென்ற வருடம் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது.

இதன் காரணமாக எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் முத்தரையர் சமூகத்தின் வாக்கு வங்கி அதிகமாக இருக்கின்ற புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், காட்பாடி, அணைக்கட்டு, மணச்சநல்லூர், திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி போன்ற 22 தொகுதிகளில் தனியாக போட்டியிட இருப்பதாக தமிழ்நாடு முத்தரையர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முதல்வராக இருந்த சமயத்தில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து சமுதாயத்தினரின் கோரிக்கையும் பரிசீலனை செய்து நிறைவேற்றி அவர்களுடைய ஆதரவை வெகுவாகப் பெற்றிருந்தார். ஏனென்றால் தமிழகத்திலேயே பெரும்பான்மையாக இருந்து வரும் எந்த ஒரு சமூகத்தையும் ஓரங்கட்டி விடக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே ஒவ்வொரு சமூகத்தினரின் நியாயமான கோரிக்கையையும் அவர் நிறைவேற்றி அதன் மூலமாக அந்த சமூகத்தை மக்களுடைய ஆதரவை பெற்று இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதன் ஒரு பகுதியாகவே முத்தரையர் சமூகம் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர் அரசாணை வெளியிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வெளியிட்ட அரசாணை இன்றுவரையில் செயல்படுத்தப்படாமல் இருந்து வருவது அந்த சமூக மக்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக தான் தற்சமயம் அந்த சமூகத்தினர் தனித்துப்போட்டி என்று தெரிவித்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவின் அனைத்து விதமான அரசியல் உத்திகளையும் பயன்படுத்திவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது ஒரு மிகப்பெரிய சமூகத்தை ஒதுக்கித் தள்ளி விடக் கூடாது கட்சியின் எதிர்காலத்திற்கும் ஆட்சியை பிடிப்பதற்கும் நல்லதல்ல என்று தெரிவிக்கிறார்கள்.ஏற்கனவே சீர்மரபினர் நல சங்கத்தினர் தமிழகம் முழுவதிலுமே ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் முத்தரையர் சமூகத்தினரும் அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கி இருப்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலங்க வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.