அரசின் மோசமான கொள்கையால் தொடர்ந்து அதிகரிக்கும் பாலின விகிதம்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கேள்வி

0
82
திருச்சி சிவா
திருச்சி சிவா

அரசின் மோசமான கொள்கையால் தொடர்ந்து அதிகரிக்கும் பாலின விகிதம்! நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கேள்வி

தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது போல மத்திய அரசு நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சத்தை டெபாசிட் செய்து விட்டதா? எனவும், மோசமான கொள்கையால் பாலின விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் மத்திய அரசுக்கு திமுக எம் பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையில் நடைபெற்று வரும் விலைவாசி உயர்வு குறித்து விவாதத்தில் திமுக எம்பி திருச்சி பங்கேற்று உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,

2014 தேர்தலின் போது நல்ல நாட்கள் வரும் என பிரதமர் மோதி வாக்குறுதி அளித்ததாக குறிப்பிட திருச்சி சிவா தற்போது மோசமான நாட்கள் மட்டுமே இருப்பதாக குற்றம் சாட்டினார்.

நாட்டில் தற்போது நிலவும் மிக மோசமான சூழலை போன்று இதற்கு முன்பு முன் எப்போதும் இருந்ததில்லை என தெரிவித்தார். அரசின் மோசமான கொள்கைகளின் காரணமாக 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை மிக மோசமான நிலைக்கு சென்று இருப்பதாக குற்றம் சாட்டினார்.

மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து பேசிய திமுக உறுப்பினர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கியதை சுட்டிக்காட்டிய திருச்சி சிவா திமுக தேர்தல் அறிக்கையின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என நிதி அமைச்சர் பேசியதை சுட்டிக்காட்டினார்.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஓராண்டில் மட்டும் 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார் திருச்சி சிவா. பெட்ரோல் விலையை மூன்று ரூபாயும் பாலின் விலையை மூன்று ரூபாயும் குறைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அரசின் மோசமான கொள்கையின் காரணமாக பெண் பாலின விகிதம் அதிகரித்து இருந்தாலும், அவர்களின் ரத்த சோகையும் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டவர் குழந்தைகளின் ஊட்டச்சத்தும் குறைந்து கொண்டே இருப்பதாக தெரிவித்தார்.

ஓராண்டு மட்டுமே ஆகியிருக்கும் எங்களை பார்த்து தேர்தல் வாக்குகளை நிறைவேற்றி விட்டீர்களா என கேட்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஆட்சிக்கு வந்த 8 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள நிலையில் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை எட்டு ஆண்டுகளில் நிறைவேற்றி விட்டீர்களா என கேள்வி எழுப்பினார்.

கருப்பு பணத்தை வெளி கொண்டு வந்து ஒவ்வொரு நாட்டு மக்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்து விட்டீர்களா என கேள்வி எழுப்பினார்.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி இருப்பதோடு மக்களை மத்திய அரசு தவறாக வழி நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது வேலைவாய்ப்பின்மை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார்.

மத்திய அரசு திடீரென அறிவித்த பண மதிப்பிழக்க நடவடிக்கை ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அடியோடு அழித்து இருப்பதாக தெரிவித்தார். ஆண்டுகள் பல கடந்த பின்னரும் பண மதிப்பிலக்கம் ஏற்படுத்திய மோசமான தாக்கங்கள் சிறு கூறு மற்றும் நடுத்தர தொழில் துறை மற்றும் பொருளாதாரத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

அத்தியாவசிய பொருட்களுக்கும் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதாக தெரிவித்தார். ஒரு மனிதன் இறந்து இடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டால் அங்கேயும் 18% வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

2011 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் 111.80 டாலராக விற்பனை ஆனபோது பெட்ரோல் ஒரு லீட்டர் 58.5 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால் இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 121 டாலராக விற்பனையாகும் நிலையில் ஒரு லீட்டர் பெட்ரோல் 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றின் போது மத்திய அரசு அறிவித்த திட்டமிடப்படாத பொதுமுடக்கத்தின் காரணமாக வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒட்டுமொத்த தேசமும் இன்னலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது கார்ப்பரேட்டுகளின் வருவாய் மட்டும் இருபது சதவீதம் அதிகரித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.