மத்திய மாநில அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது! ஆனால்…..

0
77

மத்திய, மாநில, அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது. திமுகவுக்கும், பாஜகவுக்குமிடையே எந்த விதமான உறவுமில்லை. பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்தை கூட திமுக செய்து கொள்ளாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவிற்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குமிடையே இருப்பது அரசியல் உறவல்ல, கொள்கை உறவு. இதனை யாராலும் பிரிக்க இயலாது.

திமுக நிலைத்து நிற்பதற்கு காரணம் அடிப்படை கருத்தியலில் நிற்பது தான் என்று கூறியிருக்கிறார். அதோடு கோட்டையிலிருந்தாலும், இல்லாவிட்டாலும், திமுகவின் கொள்கை என்பது என்றுமே ஒன்றுதான் என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் குறைந்தபட்ச சமரசத்தை கையாண்டால் கூட திமுக அணியில் பாஜகவின் எதிர்ப்பு என்பது மெல்ல, மெல்ல, குறைந்து போகும் என்று திருமாவளவன் கூறியிருக்கிறார். திமுக குறைந்தபட்ச சமரசத்தை கூட செய்து கொள்ளாது நான் 2 பொறுப்புகளிலிருக்கிறேன் ஒன்று கட்சி தலைவர் மற்றொன்று அனைவருக்குமான ன முதலமைச்சர் என்ற பதவி.

நான் டெல்லிக்கு காவடி தூக்கவா செல்கிறேன்? கைகட்டி, வாய் பொத்தி, உத்தரவு என்ன? என்றா கேட்கப் போகிறேன். முதலமைச்சர் என்ற முறையில் மத்திய அரசிடம் உரையாடி தமிழகத்திற்கு தேவைப்படும் திட்டங்களை பெறுவதற்குண்டான பொறுப்பு எனக்குள்ளது. மத்திய, மாநில, அரசுகளுக்கிடையே உறவு இருக்கிறது திமுகவிற்கும், பாஜகவிற்குமிடையே எந்த விதமான உறவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

திமுக கொள்கைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்குமிடையே எந்த விதமான உறவுமில்லை ஆகவே திருமாவளவன் சற்றும் கவலை கொள்ள வேண்டாம். எந்த சூழ்நிலையிலும், எந்த சமயத்திலும், திமுகவின் கொள்கைகளை ஸ்டாலின் விட்டுக் கொடுக்க மாட்டான், குறைந்தபட்ச சமரசமும் செய்து கொள்ள மாட்டான், இன்று திராவிட மாடல் ஆட்சி என தெரிவிக்கிறோம். இது திமுகவின் கொள்கை விளக்கம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஆகவே தான் சனாதனவாதிகளால் இந்த அரசு அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளாகிறது. நான் அதிகம் விமர்சிக்கப்படுகிறேன், திருமாவளவன் பிறந்த நாளில் சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஒன்று திரட்டுவோம் என்ற உறுதி மொழியை வழிமொழிகிறேன். சங்க கால தமிழகத்திற்கு எதிரானது சனாதன சக்திகளின் சங்கத்துவம், அதனை ஒன்றிணைந்து வீழ்த்துவோம் என்று அவர் பேசியிருக்கிறார்.