மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!!

0
33

 

மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடையில்லை… மதுரை உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு…

 

மதுரையில் நாளை மறுநாள்(ஆகஸ்ட் 20) நடக்கவிருக்கும் அதிமுக கட்சியின் மாநாட்டுக்கு எந்தவித தடையும் இல்லை என்று மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் மாநாடு இதுவாகும். இதையடுத்து மதுரையில் வருகிற 20ம் தேதி அதிமுக கட்சியின் வீர எழுச்சி மாநாடு நடைபெறவுள்ளது.

 

இந்த மாநாட்டுக்காக மதுரை ரிங் ரோடு வலையன்குளம் பகுதியில் 65 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட மேடையும் பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இந்நிலையில் மாநாட்டுக்கான மேடை அலங்காரப் பணிகளும், பந்தல் அலங்காரப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் மதுரையில் நடேபெறவுள்ள மாநாட்டை தடை செய்யக் கோரி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

 

சிவகங்கையை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் மதுரையில் நடக்கும் அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் மாநாடு நடத்துவதற்கு விமானநிலைய அதிகாரிகளிடம் உரிய தடையில்லா சான்று பெறவில்லை. மாநாட்டுக்கு அதிக மக்கள் வரவுள்ளதால் விமானத்தை தரையிரக்க கால தாமதம் ஆகும். போக்குவரத்து இடையூறு ஏற்படும். இதனால் அதிமுக மாநாட்டை தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மாநாட்டுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ் சுந்தர் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோரின் முந்நிலையில் நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் “நான்கு மாதத்திற்கு முன்னரே அதிமுக மாநாட்டுக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் மாநாட்டை தடை செய்ய வேண்டும் என்று கூறினால் எவ்வாறு முடியும்? என்று கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் மதுரையில் மாநாடு நடத்த எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவு பிறப்பித்தனர்.