மாநிலங்களவைத் தேர்தல் எதிரொலி! முன்கூட்டியே முடிவுக்கு வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!

0
58

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற 13-ஆம் தேதி ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தின் முதல் டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் முறையாக தமிழக வரலாற்றில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். என்ற இரண்டு தினங்களாக அதாவது ஆகஸ்ட் 16 மற்றும் 17ம் தேதிகளில் இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சட்டப் பேரவையின் தலைவர் அப்பாவு தலைமையில் நேற்று பிற்பகல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் துரைமுருகன், ஐ பெரியசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரையில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்த சூழலில் ஒரு வாரத்திற்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி இந்த கூட்டத்தொடரை முடித்துக் கொள்வது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களவைத் தேர்தல் அலுவல் காரணமாக, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே அதாவது செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நிறைவு பெறும் என்று சபாநாயகர் சட்டசபையில் அறிவித்திருக்கின்றார். அதன் அடிப்படையில் சட்டசபையில் நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் மறைவை அடுத்து இந்த மாநிலங்களவை இடம் காலியாக இருக்கிறது. இந்த இடத்தை நிரப்பும் விதத்தில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்ற மூன்று இடங்களில் ஒரே ஒரு இடத்திற்கு மட்டுமே தற்சமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.