அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?

0
142

அல்சர் நோயிற்கான அறிகுறிகள் என்னென்ன? வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன?

காலை உணவு ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. Break fast என்பதன் பொருள் என்ன தெரியுமா? இரவு உணவுக்குப் பின் நீண்ட நேரம் கிட்டத்தட்ட 8 மணி நேர உறக்கத்திற்குப் பின் தான் காலை உணவை எடுத்துக் கொள்கிறோம். அந்த உண்ணாவிரதத்தை முடிப்பதாலேயே அதை break fast என்கிறோம். இது எவ்வளவு முக்கியம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. காலை உணவை தவிர்ப்பதால், நோய்களை வெற்றிலை பாக்கு வைத்து, அழைப்பதற்குச் சமம்.

அல்சர் இந்த வார்த்தையை கடக்காதவர்களே இல்லை. நாம் உண்ணும் உணவை செரிப்பதற்காகவும், வயிற்றில் நுண்கிருமிகள் தாக்கத்தை குறைப்பதற்காகவும் இயற்கையாக படைக்கப்பட்டது தான், HCL அமிலம். இந்த அமிலத்தில் இருந்து வயிற்றை காக்க, மியூக்கஸ் என்ற லேயர் செயல்படுகிறது. இந்த லேயரில் பாதிப்பு ஏற்படும் போது, அமிலத்தால் வயிற்றில் புண் ஏற்படும். இந்த பாதிப்பு தான் அல்சர் என்கிறோம்.

மேற்கத்திய நாடுகளில் 10ல் ஒருவருக்கு இந்த அல்சர் பாதிப்பு உள்ளது. அல்சர் ஒரு சாதாரண பிரச்சினை தான். சுலபத்தில் குணப்படுத்தி விடலாம். அல்சர் உள்ளவர்களுக்கு செரிமாணம் நடப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. சில நேரங்களில் அஜீரணக் கோளாறு என்று தெரியாமல் நெஞ்செரிச்சல் என்று தவறாக நினைத்துக் கொள்கிறோம்.

எல்லா அஜீரணக் கோளறுகளும் நெஞ்செரிச்சல் என்று எண்ண வேண்டாம். நெஞ்செரிச்சல் என்பது, அளவுக்கதிகமான அமிலம், சுரந்து, அது வெளியே வருவது போன்ற உணர்வு. எதுக்களித்தல் என்று கூறுவோமே அது தான். அல்சர் என்பது, அமிலத்தால் வயிறு மற்றும் குடல் பகுதியில் புண் ஏற்படும். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் எடை குறைதல், வயிற்றில் வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு உண்டாகிறது.

அல்சரை குணப்படுத்த சித்த மருத்துவத்தில் பல வழிகள் உள்ளன. முதலில் மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். காலை, மதியம், இரவு என, மூன்று வேளையும், தேவையான அளவு சாதத்துடன், அதில் நெய் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடவும். இப்படி சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் உள்ள எரிச்சல் நிற்கும். சித்த மருத்துவர் பரிந்துறையின் படி, அன்ன பேதி செந்தூரம் சாப்பிட்டு வர, அல்சர் குணமாகும்.

இரைப்பை புண் உள்ளவர்கள், புளி வகைகளை சேர்க்கக் கூடாது, தயிர் மற்றும் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும். மதுபானங்கள், புகையிலைப் பக்கம் போகவே கூடாது. காபி, டீ அல்சரை அதிகப்படுத்தும். ஓட்டல், பாஸ்ட் புட் உணவுகளின் வாசனை கூட வேண்டாம். இவைகளை தவிர்த்தாலே போதும், ஓரளவு அல்சரில் இருந்து மீண்டு விடலாம்.

மேலும், நீர் காய்க்களையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பனங்கற்கண்டு, கற்றாழை, வெந்தயம், சின்ன வெங்காயம், நெய்யில் வருத்த பூண்டு, போன்றவற்றை அவ்வப் போது எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்த வரை வெறும் வயிறாக இருக்க வேண்டாம்.

சில வருடங்கள் அல்சரை குணப்படுத்தாமல் விட்டால், பல வருடங்கள் கடந்த நிலையில், கேன்சராக மாறும் சூழ்நிலை உண்டு. அல்லது குடலில் உள்ள புண்கள் ஒன்றோடு, ஒன்று ஒட்டி குடல் அடைப்பு ஏற்படும். இது மோசமான நிலைக்கு தள்ளிவிடும்.

பணத்தை தேடி, வாழ்க்கையை தேடி, எதிர்காலத்தை தேடி என்று, எல்லோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கிறோம். கால ஓட்டத்தில் நம்மை நாம் பராமரித்துக் கொள்வது கூட ஏதோ அவசியம் இல்லாத ஒன்று போல் ஆகி விட்டது. சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். உடல் நல்லாயிருந்தால் தானே ஓடி ஓடி உழைக்க முடியும்.

author avatar
Savitha