குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! 

0
91
#image_title

குரூப் 4 பதவிகளுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிப்பு!! வெளிவந்த முக்கிய தகவல்! 

தமிழ்நாடு அரசு பணிகளுக்கான குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுகளில் காலியிடங்களுக்கான எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதா?? என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிகளில் 7,381 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இதற்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்து கடந்த ஜூலை 24ஆம் தேதி சுமார் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வை எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

முதலில் 7381 இடங்களுக்கு தான் அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு மீண்டும் காலியிடங்கள் சேர்க்கப்பட்டு 9870 இடங்களாக அதிகரிக்கப்பட்டன. மீண்டும் சில இடங்கள் அதிகரிக்கப்பட்டு இறுதியாக 10 117 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் மூன்று ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாத சூழ்நிலையில் தற்போது 20000 காலியிடங்களாவது அதிகரித்தால் நல்லது என தேர்வர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதற்கான சரியான விளக்கம் டிஎன்பிஎஸ்சி தரப்பில் இருந்து வெளியிடப்படாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னால் மேலும் சில காலியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

ஏற்கனவே கூறப்பட்ட 10117 இடங்களுடன் 83 பணியிடங்களுக்கான காலியிடங்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் 600 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதாக பல்வேறு தகவல்கள் இணையதளத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இது பற்றி டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரி குறிப்பிடுகையில்,

முதலில் காலியாக உள்ள 10,200 பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தி தற்போது தேர்ச்சி பெற்றிருக்கும் தேர்வர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இடம் இருந்து இதுவரை தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளி வராததால் கலந்தாய்வு நடைபெறுவதற்கான தேதி தள்ளி கொண்டே செல்கிறது. முறையான பட்டியல் வந்ததும் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு காலியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஆனால் வாரிய கூட்டத்திற்கு அழைக்காமல் பணியிடங்களை நிரப்புவதற்கு முழுமையான அதிகாரம் பெற்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ஒருவரை கூட கலந்தாலோசிக்காமல்,  முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்த நிலையில் கலந்தாய்வு காலதாமதத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.