வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் தொடங்கியது மறுவாக்குப்பதிவு!

0
68

கடந்த 6ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.இதில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் முழுவதிலும் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தமிழகம் முழுவதிலும் பெரிய அளவில் கலவரங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் இந்த தேர்தல் நடைபெற்று முடிந்தது.

ஆனால் தேர்தல் நடந்த நாளன்று வேளச்சேரி சட்டசபைத் தொகுதியில் 2 வாக்குப் பெட்டிகளை இருசக்கர வாகனங்களில் இரண்டு நபர்கள் எடுத்துச் செல்ல அதனை கண்ட திமுகவை சார்ந்தவர்கள் பொதுமக்களின் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தார்கள். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் விசாரணை செய்த சமயத்தில் அந்த வாக்குப் பெட்டிகள் பழுதானவைகள் மற்றும் அதில் 15 வகைகள் மட்டுமே செலுத்தப்பட்டன. இருந்தாலும் அந்த வாக்குப் பெட்டிகளை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது தவறுதான் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால் இது தொடர்பாக தமிழகம் முழுவதிலும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஒரு அதிரடி முடிவை எடுத்தது அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 6ஆம் தேதியன்று என் 26 வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி சீதா ராம் நகர் வேளச்சேரி சென்னை 42 என்ற முகவரியில் அமைந்திருக்கின்ற வாக்குச்சாவடி எண் 92ல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லத்தக்கது அல்ல என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதோடு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 58(1)(b)படி 26 வேளச்சேரி சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட டிஏவி பப்ளிக் பள்ளி சீதா ராம் நகர் வேளச்சேரி சென்னை- 42 என்ற முகவரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண் 92ல் மறுவாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக வைக்கப் பட்டு இருந்த நிலையில், வாக்குச்சாவடி முழுவதும் துணை ராணுவ படை மற்றும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது அதோடு தேர்தல் பார்வையாளர் சர்மா மற்றும் தேர்தல் அதிகாரி கணேசன் உள்ளிட்டோர் நேற்று இந்த வாக்குச்சாவடிக்கு வந்து பார்வையிட்டுச்சென்றிருக்கிறார்கள்.

கடந்த ஆறாம் தேதி வாக்காளர்கள் வாக்கு செலுத்தியபோது இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் மறுவாக்குப்பதிவு நடைபெறுவதால் வாக்காளர்களுக்கு இடது கையின் நடு விரலில் மை வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.