“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை!

0
77

“பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் வர உள்ளார்கள்…” தியேட்டர் நிர்வாகங்களுக்கு நடிகர் விக்ரம் கோரிக்கை!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்திய சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு முன்பதிவில் எதிர்பார்க்காத அளவுக்கு வரவேற்புக் கிடைத்துள்ளது. பலரும் குடும்பத்தோடு இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் நடிகர் விக்ரம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

அதில் “பல வருடங்களுக்குப் பிறகு முதியவர்கள் இந்த படத்தைப் பார்க்க வர உள்ளார்கள். நானும் என் அம்மாவுடன்தான் சென்று படத்தைப் பார்க்க உள்ளேன். அதனால் அவர்களுக்கு தேவையான வசதிகளை திரையரங்க நிர்வாகங்கள் செய்து தரவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் சென்ஸார் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை குழந்தைகள் பெற்றோர்களின் வழிகாட்டுதலோடு திரையரங்கில் பார்க்கலாம். மேலும் படத்தின் ஓடுநீளம் 2 மணிநேரம் 47 நிமிடம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக 2.30 மணிக்கு மேல் இருக்கும் படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்து எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருகின்றன. ஆனால் பொன்னியின் செல்வன் பல கதாபாத்திரங்களின் கதையை சொல்லும் படம் என்பதால் இந்த நீளம் நியாயமானதுதான் என்று எடுத்துக்கொள்ளலாம்.