கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்

0
335
#image_title

கலப்பு தமிழ் பேசி தமிழை சாகடித்துக் கொண்டிருக்கிறோம்- பாமக நிறுவனர் ராமதாஸ்

 வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் இதனை வலியுறுத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழைத் தேடி  என்ற பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 21ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணம் வருகிற 28ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது. 

அதன் ஒரு பகுதியாக கடலூரில் நேற்று விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசும்போது, “நம் தமிழ்நாட்டில் நான் பார்க்கும் இடங்களில் வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் எதுவும் தமிழில் இல்லை. ஆனால் நாம் இன்னும் பழைய பெருமைகளை பேசி கொண்டிருக்கிறோம். தமிழ் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறது. தமிழ் அன்னையை தேடி வருகிறேன். தமிழ் புலவர்கள், சான்றோர்கள் வீட்டில் தமிழ் பதுங்கி இருக்கிறதா என்று கேட்டால், அங்கும் கலப்பு மொழி தான் பேசுகிறார்கள். 

நாம் 100-க்கு 99 வார்த்தைகளை ஆங்கிலத்தில் பேசி வருகிறோம். தமிழை தேடி மதுரை வரை செல்கிறேன். அதற்குள் தமிழ் அன்னை இங்கு தான் இருக்கிறார் என்று யாராவது சொன்னால் எனது பிரச்சார பயணத்தை தள்ளி வைக்கிறேன். தமிழ் அன்னையை பார்க்க ஓடி வந்துவிடுவேன் என்று ராமதாஸ் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலவர்கள், அறிஞர்கள் வீடுகளிலும் தமிழை கலப்பு மொழியாக தான் பேசி வருகின்றனர். மேடையில் மட்டும் தமிழ் அன்னை என்று பேசுகிறார்கள். மெல்ல தமிழ் இனி சாகும் என்று திருநீலகண்ட சாஸ்திரி கூறினார். அவர் கூறியது போல் தமிழ் மெல்ல அல்ல, வேகமாக செத்து வருகிறது. தமிழை சாகடித்து கொண்டிருக்கிறோம். கேரளாவில் மலையாளம், ஆந்திராவில் தெலுங்கு பேசுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கலப்பட தமிழ் பேசுகிறோம்.  வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப்பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் என்று இங்குள்ள புலவர்கள், அறிஞர்கள் சொல்ல வேண்டும். 1 மாதத்திற்கு பிறகும் அது நடக்கவில்லை என்றால், கருப்பு மையை வைத்து அழியுங்கள் என்று பாமக நிறுவனர்  ராமதாஸ் பேசினார்.

 

author avatar
Parthipan K