திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

0
181
#image_title

திருநெல்வேலி தொகுதியில் ஏன் இத்தனை குழப்பம்? காங்கிரஸ் உட்கட்சி பூசலால் சோனியா கவலை!

தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பான தொகுதியாக பார்க்கப்படும் திருநெல்வேலியில், திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரே ஒதுக்கியதாகவும், இதனால் காங்கிரஸ் தலைமை கோபமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திருநெல்வேலியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரனும், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிடுகின்றனர். திருநெல்வேலி காங்கிரசுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால், அத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியது திமுக. இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி ஆகிக்கொண்டிருந்த சமயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார்.

இதனால் அவசர அவசரமாக திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டார். ஆனால் இவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் இவருக்கு தேர்தல் வேலைகளை செய்து கொடுக்காததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இங்கு நயினார் நாகேந்திரன், ஜான்சி ராணி ஆகியோரின் கை ஓங்கியிருக்கும் நிலையில் ராபர்ட் ப்ரூஸ்-க்கு ஆதரவாக நிர்வாகிகளும் களம் இறங்காததால் அவருக்கு பலவீனமான தொகுதியாக இருந்தது திருநெல்வேலி. இந்த விஷயம், காங்கிரஸ் தலைமைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

உடனே சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலினிடம் இதுபற்றி பேசியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், தூத்துக்குடியில் தேர்தல் வேளையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நெல்லைக்கு கிளம்பச் சொல்லியிருக்கிறார். இதனால் ராபர்ட் ப்ரூஸ்-க்கு ஆதரவாக திருநெல்வேலி சென்ற அனிதா ராதாகிருஷ்ணன் தீவிரமான தேர்தல் கள வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், ராபர்ட் ப்ரூஸ்-க்கு தற்போது திருநெல்வேலியில் ஏறுமுகம் இருப்பதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். நாடார் சமூக வாக்குகள் கிடைக்கும் என்பதால்தான், ராபர்ட் ப்ரூஸ்-ஐ காங்கிரஸ் தேர்ந்தெடுத்ததாக கூறப்படுகிறது. திருநெல்வேலியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் யாரையும் வேட்பாளராக தேர்ந்தெடுக்காததால் தான் அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்ததாகவும் தெரிகிறது.

author avatar
Preethi