மீண்டும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு!

0
54

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கேரளா முழுவதும் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில், கேரளாவில் தான் முதன்முறையாக கொரோனா பாதிப்பு கடந்த பிப்ரவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கேரள அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் சமீப காலமாக கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று (அக். 3) முதல் ஒரு மாத காலத்திற்கு கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது இடங்களில் 5 நபருக்கு மேல் ஒன்றாக கூட அனுமதி கிடையாது என்றும், கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியே செல்ல கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் திருமணம், இறுதிச்சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. பிற மாவட்டங்களில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், பொது போக்குவரத்து, வங்கி சேவைகள் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிலவரத்தை ஆய்வு செய்து, தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K