அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது 

0
111
Salem News in Tamil Today
Salem News in Tamil Today

அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை அடித்து மிரட்டல் விடுத்த 3 பேர் கைது

ஓமலூர் அருகேயுள்ள பொட்டியபுரம் கிராமத்தின் வழியாக இரவில் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை ரவுடிகள் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தில் 2 வாலிபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கில் தற்போது கொலை வழக்கில் சிக்கிய ரவுடி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் உள்ளிட்ட வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், 63 என்ற நகர பேருந்து ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம், நாலுக்கால்பாலம் ஆகிய பகுதிகளின் வழியாக தின்னப்பட்டி ரயில் நிலையம் வரை சென்று வருகிறது.

மூன்று நாட்களுக்கு முன் இரவு கடைசியாக நாலுக்கால் பாலத்தில் இருந்து 10.45 மணிக்கு ஓமலூர் நோக்கி அரசு பேருந்து வந்தது. அப்போது பொட்டியபுரம் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பேருந்தை தடியால் அடித்துள்ளனர்.

இதையறிந்த ஓட்டுனரும், நடத்துனரும் எதற்காக பேருந்தை அடிக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அப்போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதுடன், ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், பாதிக்கபட்ட இருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரில் தருமபுரி மாவட்ட அரூர் அருகேயுள்ள சுண்டகாப்பட்டி பகுதியை சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ்குமார், நாயக்கன்கொட்டாய் சவுலுபட்டியை சேர்ந்த நடத்துனர் வேடியப்பன் ஆகிய இருவரும் கடைசி நடையாக பேருந்தை ஒட்டிக்கொண்டு ஓமலூர் நோக்கி வந்தோம். அப்போது ஒரு கும்பல் சண்டை போட்டுகொண்டு இருந்தது. அவர்களை கடந்து செல்லும் போது சிலர் பேருந்தை தடியால் அடித்தனர்.

இதை தட்டி கேட்ட போது எங்கள் இருவரையும் அடித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்தனர். மேலும் சம்பவத்தை செல் போனில் படம் பிடித்து ஆதாரமாக கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பொட்டியபுரம் பகுதியில் கடந்த வாரத்தில், காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த கும்பலுக்கும், பொட்டியபுரத்தை சேர்ந்த கும்பலுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் இரவில் மோதல் நடந்துள்ளது. பொட்டியபுரம் பகுதியில் ரவுடி கும்பல் உருவாகி வருவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கிராமத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ரவுடி கும்பலை ஓமலூர் போலீசார் தேடிவந்தனர்.

இதனிடையே பொட்டியபுரம் வழியாக செல்லும் அனைத்து பேருந்து போக்குவரத்தையும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஓட்ட மறுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கொடுத்த செல்போன் வீடியோ ஆதாரத்தைக் கொண்டு பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரது மகன் விஜி 21 தங்கவேல் என்பவரது மகன் சின்னதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இதன் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஏற்கனவே நாலுகால்பாலம் புதுக்கடை பகுதியில் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நவீன் என்கிற ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளியான ரவுடி நவீனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்