9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்! அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் இட்ட தேர்தல் ஆணையம்!

0
77

விடுபட்டு இருந்த 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அடிப்படையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இதன் ஒரு பகுதியாக கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இந்த ஒன்பது மாவட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 22 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தல் எதிர்வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுவதை பல அரசியல் கட்சிகளும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய கட்டுப்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, திருநெல்வேலி, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கின்ற சூழ்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக தேர்தல் ஆணையம் ஒரு சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

அதனடிப்படையில், தேர்தல் அறிவிப்பு நடைபெற்ற நாள் முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரையில் பிரச்சாரத்திற்காக ஒலிபெருக்கிகளை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே பயன்படுத்தலாம், பொதுக் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்றால் காவல்துறை அனுமதி முக்கியம் என்று தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

அரசு வளாகத்தில் சுவரொட்டிகள் போன்றவற்றை ஓட்டுதல் மற்றும் கட்அவுட்கள், கொடிகள், உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்த இயலாது. உரிமையாளரிடம் ஒப்புதல் வாங்கி விட்டோம் என்ற காரணத்தின் அடிப்படையில் சுவரில் எழுதுவது, சுவரொட்டி ஒட்டுவது, உள்ளிட்ட செயல்பாடுகள் இருக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.