தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை நிறைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. பல படங்கள் அதிக நாட்கள் ஓடி கோடிக்கணக்கில் வசூலைப் பெற்று வருகின்றது. அந்தக் காலங்களில் ஒரு படம் 100 நாட்கள் ஓடினாலே பிளாக்பஸ்டர் என்றுதான் அர்த்தம். பிரபல நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் ஆகியோரின் பல படங்கள் அதிக நாட்கள் ஓடி மக்கள் மனதில் இடம் பிடித்தது.
எப்போதுமே “முதல்” என்கின்ற வார்த்தைக்கு வலிமை அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு, சினிமாவில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார், தல, தளபதி, உலகநாயகன் போன்ற முன்னணி நடிகர்களைதான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல முன்னணி நடிகர்களை வைத்துப் பல கோடிகள் செலவு செய்து ஒரு படத்தை எடுத்து அதை பிளாக்பஸ்டர் ஆகச் செய்கின்றனர்.
ஆனால், 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் லட்சக்கணக்கில் மட்டுமே வசூல் ஆன நிலையில் ஒரு படம் ரூ. 1 கோடிக்கு வசூல் ஆகியுள்ளது. ரூ. 1 கோடிக்கு வசூல் ஆன படம் யாருடையது தெரியுமா? அவர் வேறு யாருமில்லை, நடிகர் பாக்கியராஜ்தான். 1984-ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி, எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம்தான் “தாவணிக் கனவுகள்”. இந்தப் படம்தான் ரூ. 1 கோடி வசூலான முதல் படமாகும்.
இந்தப் படத்தில் பாக்யராஜிற்கு ஜோடியாக நடிகை ராதிகா நடித்தார். நடிகர் சிவாஜி கணேசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நித்யா, பிரியதர்ஷினி, உமா பாரதி, பார்த்திபன் ஆகிய பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசைஞாணி இளையராஜா இசை அமைத்திருந்தார். பல டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்று இந்தப் படத்தை வாங்கப் போட்டி போட்டு இருக்கின்றனர். அந்த நேரத்தில் ரஜினி, கமல் ஆகியோர் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் அவர்களின் படங்கள் லட்சங்களில் மட்டுமே வசூல் ஆகின.
இந்தப் படத்தைதான் முதன்முறையாக பிரபல டிஸ்ட்ரிபியூட்டர் ஒருவர் ரூ. 1 கோடி கொடுத்து வாங்கி தமிழகத்தில் வெளியிட்டு இருக்கிறார். அவர் நினைத்தது போலவே இந்தப் படம் ரூ. 1 கோடிக்கு மேல் லாபம் பார்த்ததோடு மட்டுமில்லாமல், 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையைப் படைத்தது. இதைத் தொடர்ந்து, தெலுங்குவிலும் “அம்மாயிலு பிரேமின்சண்டி” என்கின்ற பெயரில் இந்தப் படம் டப்பிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.