அதிமுக தலைமையை மிரட்டிய அறந்தாங்கி சட்டசபை உறுப்பினர்!

0
59

சமீபகாலமாக அதிமுகவில் பல சலசலப்பு எழுந்து வருகிறது. எதிர்வரும் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வில் தொடங்கிய அந்த சலசலப்பு விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அந்த விதத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பாக சீட் கொடுக்கப் படாத காரணத்தால், அதிமுகவில் பலர் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதியில் அதிமுக சார்பாக சட்டசபை உறுப்பினராக இருந்து வருபவர் ரத்தினசபாபதி இந்த நிலையில், ரத்தினசபாபதி எதிர்வரும் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்.

ஆனாலும் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரானுக்கு ஆதரவாக செயல்படுவார் என்ற அதிமுக தலைமை சந்தேகத்தின் காரணமாக. அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ரத்தினசபாபதி கட்சிப் பொறுப்பில் இருந்து திடீரென்று விலகிவிட்டார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரத்தினசபாபதி அதிமுகவை தற்சமயம் சர்வாதிகாரிகள் ஆண்டு வருகிறார்கள் என்று குற்றம்சாட்டி இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக சார்பாக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களை உள்ளூரில் இருக்கும் கட்சியினரே ஏற்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ரத்தினசபாபதி.

அதேபோல அறந்தாங்கி உட்பட சிக்கலான தொகுதிகளில் அறிவித்து இருக்கின்ற ஏற்பாடுகளை மாற்றி அறிவிக்க வேண்டும் இல்லையென்றால் விராலிமலை முருகன் கோவிலில் ஆரம்பித்து கோடியக்கரை வரையில் பொதுமக்களிடம் நீதி கேட்டு வாகன பிரச்சாரம் செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக தோல்வி என்றால் அது முழுக்க முழுக்க அமைச்சர் விஜயபாஸ்கரையே சாரும் என்று தெரிவித்திருக்கிறார் ரத்தினசபாபதி.