அம்மா கிளினிக் மூடல் விவகாரம்! சட்டசபையில் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் காரசார விவாதம்!

0
64

நேற்று முன்தினம் 2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது, வருடத்தின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டம் தொடங்கியது.

இதில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளும், வெளியேறினர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அம்மா கிளினிக்கை மூடிய விவகாரத்தில் சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், நேரடி விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, திமுக தேர்தல் வாக்குறுதியில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவனுக்கு நகை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது, தற்சமயம் குறைவான அளவிலேயே கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது என கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியசாமி ஐந்து பவுனுக்கு கீழே நகை அடகு வைத்த 13 லட்சத்து 40 ஆயிரம் நபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. ஐந்து பவுனுக்கு மேல் நகை வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று நாங்கள் தெரிவிக்கவில்லை. ஒரு ஆதார் அட்டை எண்ணை வைத்து நூற்றுக்கும் மேல் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. 21 லட்சம் குறுக்கு வழியில் கடன் பெற முயற்சி செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்க இயலாது தகுதியுள்ளவர்கள் விடுபட்டு இருந்தால் அதற்கான தொகையை ஒதுக்கி அவர்களின் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பதிலளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி- தற்போது அம்மா உணவகங்களில் ஆள் குறைப்பு செய்யப்படுகிறது, சம்பளமும் குறைத்து வழங்கப்பட்டு இருப்பதுடன் பொருள்களும் குறைவான அளவிலேயே ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக உரையாற்றிய அமைச்சர் கே என் நேரு தெரிவித்ததாவது, அம்மா உணவகத்தில் ரூபாய் 1200 க்கும் விற்பனையாகும் கடைகளில் 30 பேர் வேலை செய்கிறார்கள், ஆகவே அவர்களை வேலையை விட்டு அனுப்பாமல் சுழற்சி முறையில் வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவை முன்னவர் துரைமுருகன் அம்மா உணவகத்தை மூடினால் தான் என்ன? தலைவர் கலைஞர் கொண்டுவந்த எத்தனையோ திட்டங்களை நீங்கள் நிறுத்தி வைத்து விட்டீர்கள். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், என எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். நாங்கள் ஒன்றைத் தானே மூடி இருக்கிறோம் என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீங்களே இப்படி பேசலாமா? மூடினால் அதற்கான பலனை அனுபவிப்பீர்கள் என்று தெரிவித்தார். உடனடியாக இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தலைவர் கலைஞர் பெயரை மூடி மறைத்ததால்தான் மக்கள் உங்களுக்கு தண்டனை வழங்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அம்மா கிளினிக்கை 1900 பகுதிகளில் ஆரம்பித்தோம், பொதுமக்களிடம் கருத்து கேட்டோம், அதை வேண்டாம் என்று சொன்னால் நிறுத்தி விடுவோம் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அம்மா கிளினிக்கில் மேஜை, நாற்காலி, தவிர எதுவும் இல்லை. அது அம்மா கிளினிக் அல்ல சும்மா கிளினிக் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஏ.வ. வேலு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் என்ன செய்தீர்கள்? இப்போது எவ்வாறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதனை அடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அம்மா கிளினிக்கை பழிவாங்குவதற்காக நிறுத்தவில்லை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் பொதுமக்களுக்கு பயன்பட்டது, இந்த கிளினிக்கில் உட்கட்டமைப்பு வசதியை இல்லை, தற்போதைய நிதி ஆதாரத்தை பொருத்துதான் அது தேவையில்லை என்று அரசு கொள்கை முடிவு எடுத்தது என கூறினார்.

அடுத்ததாக உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இணையதள சூதாட்டத்திற்கான தடை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, ஆனால் சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றதால் அது ரத்து செய்யப்பட்டது. ஆகவே இணையதள சூதாட்டத்தை தடை செய்வதற்கான புதிய சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி இணையதள சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து என்பது இல்லை. தற்சமயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது, தமிழ்நாட்டில் இணையதள சூதாட்டம் இல்லாத நிலையை நாங்கள் உருவாக்குவோம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் காற்று இல்லாத பலூன் போல ஆளுநர் உரை சுருங்கிவிட்டது, எந்தவிதமான மக்கள் நலத் திட்டங்களும் இல்லை, மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாக்களித்த மக்கள் தலையில் வைக்கப்பட்ட காகிதப்பூ என்று தெரிவித்தார் இவ்வாறு சட்டசபையில் விவாதம் காரசாரமாக நடைபெற்றது.