திறனற்ற திமுக அரசால் அனைத்து துறைகளும் அழிவை சந்தித்து வருகிறது! கொதித்தெழுந்த அண்ணாமலை!

0
86

சென்னை வியாசர்பாடியை சார்ந்த பிரியா என்ற 17 வயது சிறுமி ராணி மேரி கல்லூரியில் படித்து வருகிறார். கால்பந்து வீராங்கனையான இவருக்கு வலது கால் பகுதியில் வலி ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து முட்டி ஜவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் செய்யப்பட்டது.

ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகும் பிரியாவின் காலில் அதிகளவு வலி மற்றும் வீக்கம் இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கடந்த வாரம் உள் நோயாளி பிரிவில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவருடைய காலில் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டிருப்பதால் உடல் உறுப்புகள் பாதிப்பு அடைந்தது. இதனைத் தொடர்ந்து முட்டிக்கு மேல் பகுதியிலிருந்து கால் அகற்ற வேண்டிய சூழ்நிலை உண்டானது.

சிகிச்சை, அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் ரத்தநாள சிகிச்சை நிபுணர், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர், மயக்க மருத்துவர், சிறுநீரகவியல் துறை நிபுணர் மற்றும் மூத்த மருத்துவ குழுவினரால் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், அவருடைய உடல் நிலையில் பின்னடைவு உண்டாகி சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் முன்னேற்றம் உண்டாகாமல் இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கால் ஜவ்வு சிகிச்சைக்காக சென்ற கால்பந்து வீராங்கனை தவறான சிகிச்சையின் காரணமாக, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

 

இதுகுறித்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதள பதிவில் அறுவை சிகிச்சையின் போது அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை வழங்கியதன் காரணமாக, கல்லூரி மாணவி கால்பந்து வீராங்கனை சகோதரி பிரியா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியை வழங்குகிறது.

சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரனற்ற திமுகவின் ஆட்சியில் ஒவ்வொரு அரசு துறையும் அழிந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மருத்துவ துறையும் இணைந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தவறான சிகிச்சை வழங்கிய அரசு மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். திமுக அரசு சகோதரி பிரியா அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நஷ்ட ஈடாக 2 கோடி ரூபாய் அவருடைய குடும்பத்தாருக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருக்கிறார்.