முறையிட்ட பொதுமக்கள்! கோரிக்கை வைத்த எதிர்க்கட்சித் தலைவர்!

0
74

சென்ற இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து அதன் காரணமாக, சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இந்த சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு தினங்களாக கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இருக்கின்றார். ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற எதிர்க்கட்சித்தலைவர் தன்னுடைய வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மழை நீரில் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பிரெட், பிஸ்கட், போர்வை, உள்ளிட்ட பொருட்களை நிவாரணமாக, வழங்கியிருக்கிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றிருந்தார்கள்.

சென்னை கோயம்பேட்டில் ஆய்வுசெய்த பின்னர் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சென்ற ஆட்சிகாலத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நடவடிக்கை எடுக்கப்படும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை தற்போது தான் ஆரம்பித்திருக்கிறது, சுமார் ஒன்றரை மாத காலம் இந்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

ரெட் அலர்ட் வந்தவுடன் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை திமுக அரசு முன்னெடுத்து இருக்கவேண்டும், ஆனால் இந்த அரசின் மெத்தனப் போக்கின் காரணமாக, பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தற்போதைய முகாம்களில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ராட்சத மின் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றி இருந்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள், அவதிக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள் என தெரிவித்திருக்கிறார்.

நான் முதலமைச்சராக இருந்த சமயத்தில் பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மருத்துவ வசதி, தங்கும் வசதி என அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன் என கூறியிருக்கிறார். அத்துடன் இனி வரும் காலங்களிலாவது முதலமைச்சர் ஸ்டாலின் விழிப்புடன் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும், இன்றைய தினம் நான்கு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டேன் ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கி இருக்கிறது. இதுவரையில் எந்தவிதமான அரசு அதிகாரியும் அந்தப் பகுதிகளுக்கு வரவில்லை என்று அங்கே இருக்கக்கூடிய பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

ஆகவே உடனடியாக மாநகராட்சி ஆணையரை தொடர்புகொண்டு அந்த பகுதிகளுக்கு மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன், கோயம்பேடு, அஜீஸ் நகர், மேட்டு குளம், பூந்தமல்லி, உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல நீர் தேங்கி இருக்கின்றன. நான் பார்வையிட்ட எல்லா இடங்களிலும் கழிவு நீரும், மழை நீரும், கலந்திருந்தது என தெரிவித்திருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.